Annamalai Met Tamilisai Soundararajan: தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று சந்தித்தார்.
தமிழிசை சௌந்தரராஜனுக்கும் அண்ணாமலைக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது என அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளானது. மேலும் , மத்திய உள்துறை அமைச்சரும், தமிழிசை சொந்தரராஜனை கண்டித்ததாகவும் தகவல் பரவியது. இந்த தருணத்தில், தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று சந்தித்தார்.
இந்நிலையில், என்ன நடந்தது, தமிழிசையை சந்தித்த அண்ணாமலை தெரிவித்தது என்ன என்பது குறித்து பார்ப்போம்.
முன்னாள் ஆளுநர் தமிழிசை கருத்து:
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மக்களவை தேர்தலில் தென்சென்னையில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் தோல்வியை தழுவினார். இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, ”நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன். எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியில் நான் தலைவராக இருந்த போது கட்டுப்பாடு இருந்தது. சமூக விரோத ரவுடிகள் போல இருப்பவர்களை கட்சிக்குள் விட மாட்டேன். இப்போது அப்படி கட்சியில் சிலர் சேர்க்கப்பட்டு உள்ளனர” என பேசியிருந்தார்.
அமித்ஷா - தமிழிசை உரையாடல்:
இந்நிலையில், கட்ந்த 2 தினங்களுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா ஆந்திராவில் நடைபெற்றது. அதில் பங்கேற்று மேடையில் அமர்ந்திருந்த அமித்ஷா, அங்கு வந்த அமித்ஷா தமிழிசையை அழைத்தார். அமித்ஷா என்ன சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால், அவரது செய்கைகள், தமிழிசையை கண்டிப்பதாக இருப்பதாக கருத்துக்கள் எழு ஆரம்பித்தன.
இதனை பார்த்த பலரும், மாநில தலைமைக்கு எதிராக தமிழிசை பேசியது பாஜக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாகவே, அமித்ஷா தமிழிசையை கண்டித்ததாகவும் தகவல் எழ ஆரம்பித்தது.
இதுகுறித்து தமிழிசை தெரிவித்ததாவது, மக்களவை தேர்தல் குறித்தும், எதிர்கொண்ட சவால் குறித்தும் கேட்டறிந்தார் என்றும், அரசியல் பணி செய்ய அறிவுரை கூறியதாகவும் விளக்கமளித்தார்.
தமிழிசையை சந்தித்த அண்ணாமலை :
இந்நிலையில், புதுச்சேரி மற்றும் தெலுங்கானாவின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று சந்தித்தார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ள ட்விட்டர் பதிவில், இன்றைய தினம், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான, அக்கா தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த, அக்கா அவர்களின் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.