மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்தார். இதனால் கொந்தளித்த அதிமுகவினர் அண்ணாமலைக்கு எதிராக கடும் கண்டனங்களையும், தங்கள் எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருகின்றனர். இதனிடையே அதிமுக தலைமை கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது, “ஜெயலலிதா ஒன்றரை கோடி தொண்டர்களின் இதயத்தில் வாழும் தெய்வமாக உள்ளார். 2 நாட்களுக்கு முன்பு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவரின் நற்பெயருக்கும், புகழுக்கு களங்கும் விளைவிக்கும் விதமாக பொதுவெளியில் ஏற்றுக்கொள்ள முடியாத திட்டமிட்டு உள்நோக்கத்துடன் பேட்டியாக கொடுத்துள்ளார். இது ஜெயலலிதாவின் தொண்டர்கள் மற்றும் மக்களின் இதயத்தில் பெரும் கொந்தளிப்பும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் வாஜ்பாய், அத்வானி ஆகியோர் அம்மா மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தனர். அம்மாவை பலரும் அவரது இல்லத்திலே நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். பிரதமர் மோடி அம்மா மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனையும் நடத்தியுள்ளார். பா.ஜ.க. முதன்முதலில் மத்தியில் ஆட்சியில் வருவதற்கு மூலக்காரணமாக இருந்ததே அம்மாதான். அவரை பொதுவெளியில் அவதூறாக பேசிய அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.