செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்துள்ள படளாம் காவல் எல்லைக்குட்பட்ட புக்கதுரை என்ற பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் கணவன், மனைவி இருவர் உயிரிழந்தனர். இதேபோன்று மதுராந்தகம் பகுதியில் ஏற்பட்ட மற்றொரு விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். அடுத்தடுத்து சில நிமிடங்களில் நடந்த இரு வேறு விபத்தில் மூவர் உயிர் இழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

.

 சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்  பராமரிப்பு பணி

 

செங்கல்பட்டு (Chengalpattu Accident): செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த சம்பத் மற்றும் சுதா ஆகிய இருவர் தம்பதியினர். மதுராந்தகத்திலிருந்து பணி நிமிர்த்தமாக கணவன், மனைவி இருவரும் செங்கல்பட்டு வந்துள்ளனர். தங்களது பணிகளை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அச்சமயத்தில், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாமண்டூர் மற்றும் புக்கத்துறை பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது. காவல்துறையினர் அனுமதி உடன் இந்த பராமரிப்பு பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுதா மற்றும் சம்பத் தம்பதியினர் நிலை தடுமாறி கீழே விழுந்தபோது, பின்னால் வந்த கனரக வாகனம் இருவர் மீதும் ஏறி இறங்கியது. இதில், உடல் நசுங்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பராமரிப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது இந்த விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

மதுராந்தகம் அருகே விபத்து 

 

அதேபோன்று மதுராந்தகம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டன. மாம்பழம் ஏற்றிக்கொண்டு வந்த மினி லாரி, கனரக வாகனம், ஆகியவை மோதிக்கொண்டது. இதில், மினி லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த இரு வேறு விபத்து தொடர்பாக படாளம் காவல்துறையினர் மற்றும் மதுராந்தகம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.