Annamalai: 2026ல் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை பாஜக ஏற்படுத்தும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், எச். ராஜா, மாவட்ட துணை தலைவர் கரு நாகராஜன், கேசவ விநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கிய போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மருத்துவ பரிசோதனைக்காக சென்றதால் சற்று தாமதமாக வந்து கலந்துக்கொண்டார். மக்களவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தற்போது முதல் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
”கவலையும் இல்லை; வருத்தமும் இல்லை"
இதில் முக்கிய திருப்பமாக கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுக மற்றும் பாஜக இடையே இருந்த கூட்டணி முறிந்தது. அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் சில தினங்களுக்கு முன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூட்டணி முறிவு மற்றும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் தேசிய தலைவர்களுடன் பேசப்பட்டதாக தகவல் வெளியானது. அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெற இருந்த இந்த கூட்டம் அண்ணாமலை டெல்லியில் இருந்த காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டது. இப்படி பரபரப்பான சூழலில் இந்த கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டம் முடிந்தபின்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "கூட்டணியில் இருந்து போனவர்களை நினைத்து வருத்தமும் இல்லை. மகிழ்ச்சியும் இல்லை. பாஜகவை எப்படி வழிநடத்த வேண்டும் என்ற பாதையில் நான் தெளிவாக இருக்கிறேன். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
”திமுக vs அதிமுக தான்"
தொடர்ந்து பேசிய அவர், ”2024ஆம் மக்களவைத் தேர்தலில் திமுக-பாஜக இடையேயான போட்டியாக தான் இருக்கும். திமுக-பாஜக இடையேயதான் போட்டி என்பதை மீண்டும் சொல்கிறேன். யாரை எதிர்த்துத் போட்டியிடுகிறோம் என்பதில் தமிழக பாஜக தெளிவாக உள்ளது. தமிழக பாஜகவின் வளர்ச்சி, வாக்கு சதவிகிதம் உயர்வு ஆகியவை மக்களவைத் தேர்தலில் தெரியும். தமிழகத்தில் பாஜகவை வலிமையடையச் செய்வதே என்னுடைய நோக்கம்.
2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கும். கூட்டணியில் புதிய கட்சிகள் சேருவது குறித்து தேசிய தலைவர் நட்டா தான் முடிவு செய்வார். இந்த கட்சி கூட இருந்தால் தான் ஜெயிப்போம் என்று கூற முடியாது. யார் இல்லாவிட்டாலும் ஜெயிப்போம். 2026ல் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை பாஜக ஏற்படுத்தும், அதற்கான அறிகுறி 2024ல் தெரியும். மத்தியில் பத்தாண்டுகளாக ஆளுங்கட்சியாக இருக்கிறோம். நாங்கள் செய்தததை மக்களிடம் கொண்டு சேர்ப்போம். திமுக செய்திருக்க கூடிய சாதனைகளை மக்கள் முன் வைக்கட்டும். நாங்களும் எங்கள் சாதனைகளை முன்வைக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார் அண்ணாமலை.