தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று அண்ணா பல்கலைக்கழகம். தலைநகர் சென்னையில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்தில் படிக்க மாணவர்கள் போட்டாபோட்டி போடுவர்.


அத்தகைய பெருமை வாய்ந்த பல்கலை. வளாகத்திலேயே முன்பின் தெரியாத நபர் ஒருவரால், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.  இந்த நிலையில் நடந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஈபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:


’’சமுதாயத்தை சீரழிக்கும், அனைத்து விதமான குற்றச் செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் கூடாரமாக ஆளும் தி.மு.க திகழ்கிறது என்பதற்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தேறிய பாலியல் சம்பவமே சான்றாக அமைந்துள்ளது.


மாணவியை சீரழித்தாக கைதான சரித்திர பதிவேடு குற்றவாளி ஞானசேகரன் என்ற காமக்கொடூரன், திமுக உறுப்பினர் என்று செய்திகள் வருகின்றன. துணை முதல்வர், மருத்துவத்துறை அமைச்சர் ஆகியோருடன் எடுத்த புகைப்படங்கள் செய்திகளில் வருகின்றன, சமூக வலைதளங்களிலும் வலம் வருகின்றன.


சிசிடிவி செயல்பாட்டில் இல்லை என்பதை எப்படி நம்புவது?


தமிழ்நாட்டின் மிக முக்கியமான பல்கலைக்கழகத்தில் சிசிடிவி செயல்பாட்டில் இல்லை என்பதை எப்படி நம்புவது? அண்ணா பல்கலைக்கழகத்தில் சிசிடிவி வேலை செய்யவில்லை என்று திராவிட மாடல் அரசு சொல்வது "சர்க்கரையை எறும்பு தின்றது , சாக்கு பையை கரையான் தின்று விட்டது” என சொல்வது போலிருக்கிறது.


அந்த அளவிற்கு பாதுகாப்பு குறைபாட்டுடன் தான் அண்ணா பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறதா திமுக அரசு? பல வழக்குகளில் தொடர்புடைய ஞானசேகரன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் எப்படி அனுமதிக்கப்பட்டான்?


பாடசாலையா? பாலியல் குற்றவாளிகளின் கூடாரமா?


பல்கலைகழகங்களை உயர் கல்வி பயிலும் பாடசாலைகளாக நடத்துவதற்கு பதில், பாலியல் குற்றவாளிகளின் கூடாரமாக இந்த அவல ஆட்சியும் அதை நடத்தும் கட்சியினரும் மாற்றி வைத்திருப்பது உலகக் கொடுமைகளின் உச்சம்.


ஒரு ட்வீட் போட்டு கருத்து சொல்லுபவர்களைத் தேடித் தேடிக் கைது செய்யும் காவல்துறை, ஏற்கனவே பல வழக்கில் தொடர்புடைய ஞானசேகரனை கைது செய்யாதது ஏன்? ஆளுங்கட்சியான திமுகவைச் சேர்ந்தவர் என்பதாலா? போதைப்பொருள் புழக்கம், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என எல்லா கொடுஞ்செயலுக்கும் பின்னால் திமுக நிர்வாகிகள் இருப்பது என்பது, திமுக அரசுதான் குற்றவாளிகளை ஊக்குவித்தும், காப்பாற்றவும் செய்கிறதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே வலுவாக எழுப்பியுள்ளது.


ஒரு பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக அரசாங்கமா?


அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கில் உயர் நீதிமன்றமே தானாக முன்வந்து மாநில காவல் துறை விசாரணை போதாது என்று சிபிஐயை விசாரிக்க உத்தரவிட்டது. சிபிஐ விசாரணை வேண்டாம் என்று உச்சநீதிமன்றத்தில் முறையிட்டீர்கள் , ஒரு பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக அரசாங்கமே உச்ச நீதிமன்றம் வரை சென்று உறுதுணையாக இருக்குமானால், பாலியல் குற்றங்கள் புரிபவர்க்கு இ‌ந்‌‌த அரசின் மீது எப்படி அச்சம் வரும் ? இதுதான் உண்மை என்றால், உங்களிடம் சட்டம் ஒழுங்கைக் காக்கக் கோரி வலியுறுத்துவதில் எந்தப் பயனும் இல்லை.


அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமையினை எளிதில் கடந்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்தால், அதனை இப்போதே கைவிட்டு விடுங்கள்.மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்; அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இன்று அஇஅதிமுக சார்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முன் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி நடந்த போரட்டதில் , மக்களுக்காக போராடிய நிர்வாகிகளையும் , தொண்டர்களையும் , திமுக அரசாங்கம் அடக்குமுறைக்கு ஆளாக்கி கைது செய்ததற்கு எனது கடும் கண்டனங்கள்.


மக்கள் போராட்டம் ஒன்றே , தமிழ்நாட்டை காப்பதற்கான ஒரே வழி


பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? இந்த ஆட்சியின் அலட்சியத்தால், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இனி இந்த திமுக அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் ஒன்றே , தமிழ்நாட்டை காப்பதற்கான ஒரே வழி..’’


இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


இதையும் வாசிக்கலாம்: அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!