சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவிக்கு நேர்ந்துள்ள கொடூர சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே நடுங்க வைத்துள்ளது. பல்கலைக்கழகத்தின் உள்ளேயே வைத்து, பல்கலைக்கழகத்திற்கு தொடர்பே இல்லாத ஒரு நபர் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் நாட்டை உலுக்கியுள்ளது.
"ஞானசேகரனுடன் இன்னொரு நபருக்கும் தொடர்பு"
இதுதொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், "அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வழக்கில், காவல்துறை மாணவியின் தனிப்பட்ட விவரங்களுடன் FIRஐ எப்படி இணையத்தில் வெளியிட்டது?
பாதிக்கப்பட்டவரின் பெயரை வெளியிடக்கூடாது என்ற அடிப்படை கூட ஸ்டாலின் அரசின் காவல்துறைக்கு தெரியாதா? காமக்கொடூரன் ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு மாணவியை இதேபோன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இவனை இத்தனை நாட்கள் சுதந்திரமாக நடமாடவிட்டதற்கு திமுக அரசின் காவல்துறையே முழு பொறுப்பு! ஞானசேகரன் திமுக உறுப்பினரே இல்லை என்று அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ள நிலையில், அவர் திமுகவின் பகுதி துணை அமைப்பாளர் பொறுப்பில் உள்ளதற்கான திமுக நோட்டிஸ், முரசொலி நாளேடு செய்தி உட்பட பல ஆதாரங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன.
கைது செய்யப்பட்ட ஞானசேகரன், நேற்று இரவே விடுவிக்கப்பட்டு, மீண்டும் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வருகின்றன. இவ்வளவு முக்கியமான வழக்கின் குற்றவாளியை எதற்கு காவல்துறை விடுவிக்க முயற்சித்தது? ஆளுங்கட்சியான திமுகவில் ஞானசேகரன் பொறுப்பில் இருப்பதை இத்துடன் பொருத்திப் பார்த்தால், இவ்வழக்கில் அரசியல் அழுத்தம் இருப்பதற்கான சந்தேகம் மேலும் வலுக்கிறது.
FIR-ல் ஞானசேகரனுடன் இன்னொரு நபருக்கும் இதில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. யார் அந்த நபர்? #யார்_அந்த_SIR ? யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது இந்த திமுக அரசு? பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டியது ஸ்டாலின் அரசின் பொறுப்பு!
இனி இந்த வழக்கை திமுக அரசின் காவல்துறை விசாரிப்பதற்கு தார்மீகத் தகுதியில்லை! எந்தவித அரசியல் இடையூறும் இன்றி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க, இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.