ரூ.1 லட்சம் பரிசுத் தொகையுடன் வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம். 


தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் தினம், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களின் போது பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்குகிறது. அந்த வகையில், வீர, தீரச் செயல்களுக்கான “அண்ணா பதக்கம்” ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால், குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. வீர, தீரச் செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர். 


யாருக்கெல்லாம் விருது? என்ன தகுதி?


இப்பதக்கம் எந்தவொரு குடிமக்களுக்கும் வயதினை பொருட்படுத்தாமல் பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்தினைக் காப்பதில் அவர் ஆற்றிய வீர தீர செயலுக்காக வழங்கப்படுகிறது. பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் (சீருடை பணியாளர்கள் உட்பட) மூவருக்கும் இப்பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை. 


இவ்விருது ரூ.1,00,000/- (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்)-க்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை கொண்டதாகும். இப்பதக்கம் முதலமைச்சரால் 26.01.2024 குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.


2024-ஆம் ஆண்டிற்கான வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் விருதுக்கு பரிந்துரைகள் கோரப்படுகின்றன. வீரதீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பெறப்படும். 


விண்ணப்பிப்பது எப்படி?


வீரதீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகள், இணையதளத்தில் அதற்கென உள்ள படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை உள்ளடக்கியதாகவும், விருதுக்காக பரிந்துரைக்கப்படும் நபர்களின் வீரதீர செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும் தகுதியுரை (அதிகபட்சம் 800
வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்) தெளிவாகவும், தேவையான அனைத்து விவரங்களும் முறையாக நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.


வீரதீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 15 டிசம்பர், 2023 ஆகும். இணையதளத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.


பதக்கம் பெறத் தகுதியுள்ளவர்கள், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்படுவர் என்று தமிழக அரசின் பொதுத் துறை அரசுச் செயலாளர் தெரிவித்துள்ளார். 


தமிழ்நாடு அரசு விருதுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க விழைபவர், https://awards.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். awards@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைகளால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கூடுதல் தகவல்களுக்கு: https://awards.tn.gov.in


இதையும் வாசிக்கலாம்: Schools Holiday: பள்ளிகளுக்கு நவ.9 முதல் 11 நாட்கள் விடுமுறை: டெல்லி அரசு அறிவிப்பு- என்ன காரணம்? 1