அமலாக்கத்துறை (ED) வழக்குகளில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, உலகப் புகழ் பெற்ற திருப்பதி வெங்கடாஜலபதியிடம் வேண்டிக் கொண்டு ₹44 லட்சம் நேர்த்திக்கடனாகச் செலுத்தியதாகச் சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதம் எழுந்துள்ளது. திமுகவின் கொள்கைகளுக்கும், அமைச்சரின் செயலுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Continues below advertisement


அன்னதானமும் நேர்த்திக்கடன் சர்ச்சையும்


ஆந்திர மாநிலம் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மூன்று வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த அன்னதான சேவைக்காக ஒரு நாள் முழு செலவான ரூ 44 லட்சத்தை நன்கொடையாக அளிக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. காலை ரூ 10 லட்சம், மதியம் ரூ 17 லட்சம் மற்றும் இரவு ரூ 17 லட்சம் என மூன்று வேலைக்கான செலவை முன்கூட்டியே செலுத்திவிட்டால், நன்கொடையாளர் பெயரில் குறிப்பிட்ட நாள் முழுவதும் அன்னதானம் அளிக்கப்படுகிறது.


அந்த வகையில், நேற்று முன்தினம் (நவம்பர் 09, 2025) திமுகவின் முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு ரூ 44 லட்சம் செலுத்தி அன்னதானம் வழங்கியுள்ளார். அவரது பெயரும், வழங்கிய தொகையும் கோயில் சுற்றியுள்ள டிஜிட்டல் போர்டுகளில் ஒளிபரப்பானது. அமைச்சரின் ஆதரவாளர்கள், நேற்று முன்தினம் கே.என்.நேருவின் பிறந்த நாள் என்பதால் அதற்கான நன்கொடை அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். 


ஆனால், அமைச்சர் கே.என்.நேரு அமலாக்கத்துறை புகாரில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள, வெங்கடாஜலபதியிடம் வேண்டிக் கொண்டு இந்த அன்னதான நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார் எனச் சமூக வலைதளங்களில் பலத்த விவாதமும் விமர்சனமும் எழுந்துள்ளது.


அமைச்சர் நேருவின் விளக்கம்


சர்ச்சை குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது. அதில் அமைச்சர் கே.என்.நேரு,"எங்கள் குடும்பம் சார்ந்த நிறுவனத்தின் சார்பில், என் பிறந்த நாளுக்காக, ஓராண்டுகளுக்கு முன்பே அன்னதானத்திற்குத் திருப்பதி கோயிலுக்குத் தொகை செலுத்தியிருந்தோம். அந்த வகையில் தான் அன்னதானம் அளிக்கப்பட்டது. அதை கோயில் டிஜிட்டல் போர்டில் போட்டுள்ளனர். மற்றபடி வேறு எதற்காகவும் அன்னதானம் செய்யவில்லை," எனக் கூறியுள்ளார்.


சட்ட சிக்கலை தீர்க்கும் சட்டநாதர் கோயில் 


அண்மையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோயிலில் கே.என்.நேரு வழிபாடு மேற்கொண்டதும், அவர் வழக்குகளில் இருந்து விடுபடவே இந்த வழிபாடு ஏன் என்றால் சட்ட சிக்கல்களை போக்க இங்கு பக்தர்கள் வழிபாடு மேற்கொள்வது ஐதீகம் எனவும் பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


கொள்கை முரண்பாடு குறித்த நெட்டிசன்கள் விமர்சனம்


திமுக தலைமை தந்தை பெரியாரின் 'கடவுள் மறுப்பு' கொள்கையை இறுகப்பற்றிக் கொண்டிருக்கும் நிலையில், அக்கட்சியின் மூத்த அமைச்சர் ஒருவர் உலகப் புகழ்பெற்ற கோயிலுக்கு ரூ 44 லட்சத்தை அள்ளிக் கொடுத்துள்ளது நெட்டிசன்களின் கிண்டலுக்கு வழிவகுத்துள்ளது.


* "பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுவதாகக் கூறும் திமுகவினர், இப்படி உலகின் பணக்கார கோயிலுக்குப் பல லட்சங்களை அள்ளிக் கொடுப்பது எந்த வகையில் சரி?"


* "திமுக தலைவர்களான முதல்வர் மற்றும் துணை முதல்வர் சனாதனத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். ஆனால், கட்சியின் மூத்த அமைச்சரே இப்படிச் செய்வது கொள்கை முரண்பாடு இல்லையா?"


* "இந்த பணத்தை ஏழை எளிய மக்களின் நலத்திட்டங்களுக்கு அளித்திருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும்." எனப் பலரும் கேள்வி எழுப்பி, விமர்சித்து வருகின்றனர்.


திமுகவின் நியாயப்படுத்தும் கருத்து


இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் திமுகவினர் சிலர், "திமுக எந்த மதத்துக்கும் எதிரி இல்லை. மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்துவதற்குதான் எதிரி. திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் எவரும் தங்கள் விரும்பிய மதத்தைப் பின்பற்றலாம். இதுதான் திராவிட மாடல். முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினே பக்தியுள்ளவர் என்பது ஊரறிந்த விஷயம். எனவே திமுக யார் மத விஷயத்திலும் தலையிடாது," என்று தெரிவித்துள்ளனர்.


மொத்தத்தில், அமைச்சரின் செயல் ஒருபுறம் தனிப்பட்ட பக்தி என்று நியாயப்படுத்தப்பட்டாலும், மறுபுறம் திமுகவின் கொள்கைகளுக்கு எதிரான முரண்பாடாகப் பார்க்கப்பட்டு, சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.