சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அமைக்கப்பட்டுள்ள பண்பலை வானொலி நிலையத்தில், உள்ளூர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வேளாண்மை மற்றும் காலநிலை சார்ந்த நிகழ்ச்சிகளை உடனடியாக ஒலிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Continues below advertisement

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,

சேலம் மாவட்டம் ஏற்காட்டில்  உள்ள பண்பலை வானொலி நிலையம் ( அலைவரிசை: 103.7 மெகா ஹெர்ட்ஸ் ) தரம் உயர்த்தப்பட்டு, கடந்த  மார்ச் ஒன்றாம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்த நிலையில்,  அதில் இன்னும் உள்ளூர் தயாரிப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்ப்படவில்லை. மாறாக,  தேசிய அளவிலும், மாநில அளவிலும் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் மட்டுமே ரிலே ஒலிபரப்பாக செய்யப்படுகின்றன. இது ஏற்காடு பண்பலை வானொலி  உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைத்து விடும்.

Continues below advertisement

பண்பலை வானொலிகள் மேம்படுத்தப்பட்ட சமூக வானொலிகள் தான். சமூகத்திற்கு தேவையான தகவல்களை வழங்குவது தான் அவற்றின் நோக்கம்.  ஏற்காட்டில் பண்பலை வானொலி தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதைச் சுற்றியுள்ள  சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின்  வேளாண்மை, கல்வி, வானிலை உள்ளிட்ட காலநிலை ஆகியவை சார்ந்த தேவைகளை நிறைவேற்றுவது தான் அதன் நோக்கமாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக  சென்னை மற்றும்  தில்லியில் இருந்து ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளையே ஒலிபரப்புவது அந்த வானொலி நிலையங்களின் வருவாயைப் பெருக்க உதவுமே தவிர , பண்பலை வானொலி உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்ற உதவாது.

அதிலும் குறிப்பாக  ஏற்காடு தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். அங்கு நிலவும் காலநிலை, போக்குவரத்து நெரிசல், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட விவரங்கள் பண்பலை வானொலி மூலம் தெரிவிக்கப்பட்டால், அது அங்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு வசதியாக இருக்கும்.

எனவே, ஏற்காடு பண்பலை வானொலி மூலம் ஒரு நாளைக்கு குறைந்தது 10 மணி நேரமாவது  உள்ளூர் தயாரிப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவதை பிரசார் பாரதி அமைப்பு உறுதி செய்ய வேண்டும்.  சேலம் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களின் கல்வி, வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, சுற்றுலா சார்ந்த தகவல்களையும்,  கலை, இலக்கியச் செழுமையையும் மக்களுக்கு கொண்டு செல்லும் வகையிலான நிகழ்ச்சிகளை தயாரித்து ஒலிபரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.