நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் தினசரி 2 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது.  இதனால் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அனைத்து தலைவர்களும், சுகாதாரத்துறையினரும் பொதுமக்களை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மக்களுக்கு செலுத்துவதற்கு போதியளவு தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என்று பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசு மீது குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் எச்.எல்.எல், தடுப்பூசி உற்பத்தி ஆலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.


பா.ம.க. இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,


“கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்வதற்காக செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசிடம் குத்தகைக்கு வழங்கவேண்டும் என்று பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். தமிழக அரசின் இந்த நிலைப்பாடு வரவேற்கத்தக்கது






செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை மத்திய அரசு நடத்த வேண்டும். இல்லாவிட்டால் தமிழக அரசிடம் வழங்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். தடுப்பூசி வளாகத்தை ஏற்று நடத்த தமிழக அரசு முன்வந்திருப்பது பயனளிக்கும் திருப்பம் ஆகும்.






தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசிடம் உடனடியாக ஒப்படைக்க மத்திய அரசு முன்வர வேண்டும். கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கான தொழில்நுட்பங்களையும் மத்திய அரசு வழங்க வேண்டும்.






மத்திய சுகாதார அமைச்சராக நான் பதவி வகித்த போது, தடுப்பூசி உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்காக செங்கல்பட்டு தடுப்பூசி வளாகம் அமைக்கும் திட்டத்தை கடந்த 2008-ஆம் ஆண்டு உருவாக்கி ஒப்புதலும் அளித்தேன். உடனடியாக நிதியும் ஒதுக்கப்பட்டு பணிகளும் தொடங்கப்பட்டன.






கொரோனா தடுப்பூசி மட்டுமின்றி, இந்தியாவின் அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்திற்கு தேவையான அனைத்து 7 வகையான தடுப்பூசிகளையும் உலகத்தரம் வாய்ந்த செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.