கிராமசபை கூட்டத்தில் இதை செய்யுங்கள்; வார்டு உறுப்பினர்களுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்
ஊராட்சிகளின் நீர்நிலைகளை 2017 சதுப்புநில விதிகளின் கீழ் அறிவிக்கை செய்யக் கோரும் தீர்மானத்தினை உங்கள் ஊர் கிராமசபையில் நிறைவேற்ற வேண்டும்.

தமிழத்தின் 26,883 சதுப்புநிலங்களை அறிவிக்கை செய்யக் கோரி கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றுங்கள் என கிராம சபை உறுப்பினர்களுக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
உலக தண்ணீர் நாளையொட்டி வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டங்களில் தமிழகத்தில் உள்ள 26,883 சதுப்புநிலங்களையும் அறிவிக்கை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கிராமசபை உறுப்பினர்களை பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து கிராமசபை உறுப்பினர்களுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம்.
அன்புள்ள கிராமசபை உறுப்பினர்களுக்கு, வணக்கம்! மார்ச் 22, உலக தண்ணீர் நாளை முன்னிட்டு (World Water Day) 29.03.2025 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய பொருள் பட்டியலை தமிழ்நாடு அரசு அளித்துள்ளது. அவற்றில் முதலாவதாக “பொருள் 1: உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல்” என்பது அளிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், ‘நீர் நிலைகளை காக்க 2017 சதுப்புநில விதிகளின் கீழ் அறிவிக்கை வெளியிட வேண்டும்’ என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுங்கள்.
தமிழக சதுப்புநிலங்களை காப்போம்!
நீர் தேங்கும் நிலப்பகுதிகள் சதுப்புநிலங்கள் எனப்படுகின்றன. ஏரி, குளம், தாங்கல், கழிவேலி, சேற்று நிலம், கழிமுகம், அலையாத்தி காடு, ஊருணி, ஏந்தல், பொய்கை, குட்டை அனைத்தும் சதுப்புநிலங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.
மனித வாழ்வின் அடிப்படை ஆதாரமான இயற்கை வளங்களில் சதுப்புநிலங்கள் மிகவும் முதன்மையானவை ஆகும். சதுப்புநிலங்கள் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கின்றன. வெள்ளத்தைக் கட்டுப்படுத்துகின்றன. மாசுக்களை கட்டுப்படுத்துகின்றன. மண் அரிப்பைத் தடுக்கின்றன. மண் மற்றும் நீரில் உள்ள ஊட்டச்சத்துக்களை சமன்படுத்துகின்றன. மீன்கள் இனப்பெருக்கத்தை அதிகரிக்கின்றன. பறவைகளின் ஆதாரமாக உள்ளன. புயலின் தாக்கத்தை மட்டுப்படுத்துகின்றன. வெப்பத்தைக் குறைக்கின்றன.
தமிழகத்தில் மொத்தம் 42,978 சதுப்புநிலங்கள் உள்ளதாக தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் குறிப்பிடுகிறது. தமிழ்நாட்டில் பெருவாரியான சதுப்புநிலங்கள் பயனற்ற நிலங்களாக உருமாற்றப்பட்டுள்ளன. திடக்கழிவுகள், கழிவு நீர், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட கேடுகளால் நாசமாக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் சதுப்புநிலங்கள் ஆணையம் (Tamil Nadu State Wetland Authority) 26.11.2018 அன்று உருவாக்கப்பட்டது. அதிலிருந்து 22.03.2025 உலக தண்ணீர் நாள் வரை 6 ஆண்டு 3 மாதம் 2 நாட்கள் கடந்துவிட்டன. ஆனால், ஒரே ஒரு சதுப்புநிலம் கூட 2017 சதுப்புநில விதிகளின் கீழ் சதுப்புநிலமாக சட்டப்படி அறிவிக்கை (Notification)) செய்யப்படவில்லை. நமது ஊரின் நீர் நிலைகளும் இவ்வாறு அறிவிக்கை செய்யப்படவில்லை.
இஸ்ரோ SAC Wetlands Atlas 2021 பட்டியலில் உள்ள தமிழத்தின் 26,883 சதுப்புநிலங்களின் எல்லைகளை மூன்று மாத காலத்திற்குள் வரையறை செய்து தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் 11.12.2024-ஆம் நாள் உத்தரவிட்டுள்ளது
இந்நிலையில், 23.03.2025 அன்று நடைபெறும் உலக தண்ணீர் நாள் கிராமசபை கூட்டம் தமிழ்நாட்டின் நிலைகளை பாதுகாப்பதற்கான ஒரு நல்வாய்ப்பக அமைந்துள்ளது. இதனை பயன்படுத்தி, அந்தந்த ஊராட்சிகளின் நீர்நிலைகளை 2017 சதுப்புநில விதிகளின் கீழ் அறிவிக்கை செய்யக் கோரும் தீர்மானத்தினை உங்கள் ஊர் கிராமசபையில் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
கிராம சபை, ஜனநாயக அமைப்பின் அடித்தளமாகும். இந்திய அரசு, தமிழ்நாடு அரசு போன்றே மற்றுமொரு அதிகாரமிக்க அமைப்பு கிராம ஊராட்சி அரசு ஆகும். சட்டமன்ற நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராம சபை தீர்மானத்திற்கும் உண்டு. எனவே, தமிழ்நாட்டின் நீர் வளங்களை காப்பாற்றும் நோக்கில் மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
வாருங்கள், அனைவரும் ஒன்றிணைந்து நீர்நிலைகளைக் காப்போம். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வளமாக அமைப்போம். என அதில் எழுதியுள்ளார்.