பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் காயமடைந்த பெண் நிர்வாகியின் மருத்துவ செலவு அனைத்தையும் அன்புமணி ராமதாஸ் ஏற்றுக்கொண்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி சென்னையில் பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு தலைமையில் நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்ற அந்த கூட்டத்தில், கலந்துகொள்ள வந்த பெண் நிர்வாகியான தாம்பரத்தை சேர்ந்த சாந்தி கிருஷ்ணன், தனது இருக்கையில் அமர செல்லும்போது கால் இடறி விழுந்தார். இதனை கண்ட மேடையில் அமர்ந்திருந்த பாமக இளைஞரணி தலைவரும் மருத்துவருமான அன்புமணி ராமதாஸ் உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை கொடுத்து அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
சென்னை கீரிம்ஸ் சாலையில் அனுமதிக்கப்பட்ட சாந்தி கிருஷ்ணனுக்கு கால் முட்டி, தோள் பட்டை என இரண்டு இடங்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், உடனடியாக மருத்துவர்களிடம் பேசி அறுவை சிகிச்சை செய்ய அன்புமணி ராமதாஸ் உதவி செய்துள்ளார்.
இதுமட்டுமின்றி, சாந்தி கிருஷ்ணனின் அறுவை சிகிச்சை முதல் மருத்துவமனை செலவு வரை அனைத்தையும் அன்புமணி ராமதாஸ் ஏற்றுக்கொண்டுள்ளார். இது குறித்து பாமக செய்தி தொடர்பு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறும்போது, சாந்தி கிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து, வீடு திரும்புவரை அன்புமணி ராமதாசும், அவரது மனைவியும் ’பசுமை தாயகம்’ அமைப்பின் தலைவருமான சவுமியா அன்புமணியும் தொடர்ந்து அவரது உறவினர்களிடம் விசாரித்து வந்தார்கள்.
மருத்துவ செலவு 6 லட்சத்திற்கு மேல் ஆனாலும் அதை பற்றி எந்த கவலையும்படாமல் சாந்தி கிருஷ்ணன் சிகிச்சைக்கு இருவரும் உதவி உள்ளனர் என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்