கரூர் மாநகரின் மையப் பகுதியில் செயல்படும் பாலியல் தொழிலாளியின் வீட்டுக்கு செல்வதற்கு பதிலாக மதுபோதையில் அருகில் உள்ள வீட்டு கதவைத் தட்டிய இளைஞரை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததனர்.
பாலியல் தொழிலாளி:
நாமக்கல் மாவட்டம், வரவனை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (35). இவர் கரூர் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள வேம்பு மாரியம்மன் கோவில் அருகில் உள்ள நல்லதங்காள் ஓடை தெருவில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் செயல்பட்டு வரும் பாலியல் தொழிலாளியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வதாக கூறப்படுகிறது. திருமணம் ஆகாத சதீஷ்குமார் கரூர் மினி பேருந்து நிலையம் அருகில் உள்ள பெண்மணி ஒருவரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, அவர் அளிக்கும் தகவலின் பெயரில் மாதம் ஒருமுறை அந்த வீட்டிற்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது.
கட்டி வைத்து அடித்த மக்கள்:
இந்த நிலையில் வழக்கம் போல் கரூர் வந்த சதீஷ்குமார் மது போதையில் இருந்ததால், சம்பந்தப்பட்ட கட்டிடத்திற்கு செல்லாமல் அருகில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள வீட்டின் கதவை தட்டியுள்ளார். மது போதையில் அங்கிருந்த பெண்மணி ஒருவரிடம், தான் வந்த விஷயத்தை சொல்லி 1000 ரூபாய் வழக்கமாக வந்து செல்லும்போது கொடுப்பதாகவும் கூறியதால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்மணி கூச்சலிட்டுள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஒன்று கூடி அந்த நபரை, அங்குள்ள மின்கம்பம் ஒன்றில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த கரூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த இளைஞரை மீட்டு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
கரூர் மாநகரின் மையப் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் பாலியல் தொழில் நடப்பதால், அடிக்கடி இதுபோல் பிரச்சனை ஏற்படுவதாகவும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அப்பகுதியினர் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.