தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் அமுதா ஐஏஎஸ். இவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியின்போதும் சரி, கருணாநிதியின் ஆட்சியின் போதும் சரி பல்வேறு தருணங்களில் சிறப்பாக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு அவரை பிரதமரின் கூடுதல் செயலாளராக நியமித்தது மத்திய அரசு. இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக அரசு ஆட்சியமைத்ததும் திறம்பட பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்புகளில் நியமித்துள்ளது. அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலினின் குட்புக்கில் இருந்த அமுதா ஐஏஎஸ் மட்டும் மத்திய அரசுப் பணியில் இருந்தார். இதனால் தமிழ்நாடு அரசு பணிக்காக அவரை விடுவிக்குமாறு தமிழ்நாடு அரசு வலியுறுத்திக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் பிரதமரின் கூடுதல் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.


இதனிடையே, அமுதா ஐஏஎஸ் தமிழ்நாட்டிற்கு ஏன் வரவழைக்கப்படுகிறார். தமிழ்நாடு வரும் அவருக்கு என்ன மாதிரியான பொறுப்புகள் வழங்கப்படும் என்பது போன்ற பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்தன. முதலமைச்சரின் கனவுத்திட்டமான சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் ஈடுபடுத்தப்படுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில்,  அவரை ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளராக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. அமுதா ஐஏஎஸ் ஊரக வளர்ச்சித்துறையில் எதற்காக நியமிக்கப்பட்டார் என்ற விவாதங்கள் எழத்தொடங்கிவிட்ட நிலையில், அமுதா ஐஏஎஸ் ஊரக வளர்ச்சித்துறையில் எதற்காக நியமனம் செய்யப்பட்டிருக்கலாம் என்று அலசினோம்.


கடந்த 2006-2011ம் ஆண்டு நடைபெற்ற திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் துணைமுதலமைச்சராக பதவி வகித்த ஸ்டாலின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் செயலாற்றினார். அவரது காலத்தில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டது. 12வது நிதிக்குழுவின் மானியத் தொகை ரூ.3,600 கோடி செலவில் 22,113 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைப் பணிகள் முடிக்கப்பட்டன. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக்கான நிறுவனம் மறுசீரமைத்து நன்கு செயல்படுத்தப்பட்டது.




ரூ.18 கோடி செலவில் 1406 மதிய உணவு மையங்களுக்கு கட்டிடங்கள் கட்டித் தரப்பட்டன. ரூ.67 கோடி செலவில் 13,513 ஜீவன்தாரா கிணறுகள் சீர்படுத்தப்பட்டன. 700 பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு அரசு கட்டிடங்கள் கட்டித் தரப்பட்டன. சுவர்ண ஜெயந்தி கிராம போஜனா திட்டத்தின் மூலமாக 11,836 சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றின் மூலம் ரூ.12 கோடி நிதி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. 10,328 கிராமங்களில் ரூ.2,047 கோடி செலவிலான 41416 ஊரக வளர்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, பேரூராட்சி நிர்வாகம் கணினிமயமாக்கப்பட்டது.  மகளிர் மேம்பாட்டுக் கழகம் ஊரக வளர்ச்சித்துறையுடன் இணைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுக்க 1,25,000 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டன இவற்றின் மூலம் ரூ.4,000 கோடி சுழல் நிதி வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் ஊரக, உள்ளாட்சி பகுதிகளைச் சார்ந்தவர்கள் ஆவார்கள். 


இந்தநிலையில், 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து இந்த திட்டங்களில் சுணக்கம் ஏற்பட்டது. இதனால் கிராமப்புரங்களில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக கருதிய முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது திருச்சி மாநாட்டில் 7 உறுதிமொழிகளை அறிவித்தார். அதில் 6வதாக அவர் குறிப்பிட்டது ஊரக உட்கட்டமைப்பு. இந்த அறிவிப்பில், தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் இப்போது 57 விழுக்காடு கான்கிரீட் வீடுகள் உள்ளன. நாம், அடுத்த பத்தாண்டுகளில் 20 இலட்சம் கான்கிரீட் வீடுகளைப் புதிதாகக் கட்டித்தந்து இதனை 85 விழுக்காடாக உயர்த்த இருக்கிறோம். கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கும் பெரும்பணியைப் பத்தாண்டுகளில் நிறைவேற்றிக் காட்டுவோம். எந்த வானிலைக்கும் அசைந்து கொடுக்காத, தரமான சாலை இணைப்புகளையும், வடிகால் அமைப்புகளையும் ஊரகப் பகுதிகளில் கட்டமைப்போம். எல்லா கிராமங்களிலும் அகன்ற அலைக்கற்றை இணைய வசதியை - பிராட்பேண்ட் ஏற்படுத்தித் தரவுள்ளோம். பத்தாண்டுகளுக்குள் குறைந்தது, தமிழகத்தின் 50 விழுக்காடு கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை அமைப்பினைச் செயல்படுத்திக் காட்டுவோம் என்று பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்.


இதனையடுத்து, இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டின் போது, 79,375 குக்கிராமங்களில் நாளொன்றுக்கு ஒருவருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 2022-ம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் அனைத்து கிராம மக்களுக்கும் குடிநீர் இணைப்பு. இதற்காக ரூ.2,000 கோடி செலவில் `ஜல்ஜீவன் இயக்கம்' செயல்படுத்தப்படும். அண்ணா மறுமலர்ச்சி இயக்கம் மீண்டும் தொடங்கப்படும். கிராமங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுவதை இத்திட்டம் உறுதிசெய்யும் என பட்ஜெட் வாயிலாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. 




கடந்த செப்டம்பர் மாதம் சென்னை தலைமை  செயலகத்தில் ரூ.1,597.59 கோடி மதிப்பிலான ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறையில் புதியதிட்டங்களை  முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.699.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். 0நகர்ப்புறங்களை மேம்படுத்தும் அதே வேளையில் கிராமப்புறங்களையும் மேம்படுத்த வேண்டும் என்பதில் கவனமுடன் செயல்படுகிறார். குறிப்பாக மகளிர் சுயஉதவிக்குழுக்களின் செயல்பாடு வெகுவாக குறைந்துவிட்டது. அதோடு ஒதுக்கப்பட்ட நிதியில் மிக குறைவான விகிதமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. கூடவே, உள்ளாட்சித் தேர்தலும் வரவிருக்கிறது. ஏற்கனவே 9 மாவட்டங்களுக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களை வாரி சுருட்டிய நிலையில், அந்த வெற்றியை தக்க வைக்க வேண்டும் என்பதில் கவனமுடன் இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அதோடு, கடந்த ஆட்சிகாலத்தில் இத்துறையில் ஏகப்பட்ட முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையும், ஊரகப்பணிகளில் தலையீடுகள் இருப்பதால் அதிகாரிகளால் சரிவர செயல்பட முடியவில்லை என்று எழுந்த தொடர் குற்றச்சாட்டுகளை களைய வேண்டிய தேவையும் இருந்தது.


முதலமைச்சர் அறிவித்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பதற்காகவே அனைவரது குட்புக்கில் இடம்பெற்ற எந்த பொறுப்பை கொடுத்தாலும் அதை திறம்பட செய்யும் நேர்மையான அதிகாரியான அமுதா ஐஏஎஸ்-ஐ ஊரக வளர்ச்சித்துறை  முதன்மை செயலாளராக நியமனம் செய்திருக்கிறது தமிழ்நாடு அரசு. அமுதா ஐஏஎஸ் இத்துறைக்கு நியமிக்கப்பட்டிருப்பதால் கிராமப்புறங்களில் வளர்ச்சிப்பணிகள் வேகமாக செயல்படுத்தப்படலாம்  என்கிறார்கள் மூத்த அதிகாரிகள்.