மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு போதிய அளவிலான நிதியை ஒதுக்குவதில்லை என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. புதிய கல்விக்கொள்கைக்கு தமிழக அரசு உடன்பட மறுப்பதால் மத்திய அரசு நிதி ஒதுக்க வருவது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் திட்டங்கள்:
இந்த நிலையில், தனியார் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள அமித்ஷாவிடம் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் நிதி மற்றும் திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமித்ஷா, மத்திய அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படாமல் உள்ளது. செயல்படுத்தப்படும் திட்டங்களும் குறைபாடுகளுடன் செயல்படுத்தப்படுவதால் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களை தவறாக திமுக அரசு சித்தரிக்கிறது.
நிதி தவறாக பயன்பாடு:
பல திட்டங்களை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் அவர்கள் பெயரளவிற்கு செயல்படுத்திய திட்டங்களிலும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை ஐசிடிஎஸ், நிதி தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது. பிரதமரின் மாத்ரு வந்தன யோஜனா திட்டத்தில் முந்தைய நிதி ஒதுக்கீட்டை முறையாக செலவு செய்யவில்லை. ஆனால், அதற்குள் அடுத்த தவணைக்கான தொகையை விடுவிக்குமாறு திமுக அரசு கேட்கிறது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திலும் ஏாளமான ஊழல் புகார்கள் உள்ளது.
வீடுதோறும் குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்திலும் போலி இணைப்புகள் புகார்கள் குவிந்துள்ளது. மேலும், மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்திலும் தகுதியற்றவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டு, உண்மையான பயனாளிகளை ஏமாற்றுவதாக புகார்கள் எழுந்துள்ளது.
மூன்றரை மடங்கு அதிகம்:
பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை தரவில்லை என திமுக தரப்பு கூப்பாடு போடுகிறது. 2014ம் ஆண்டுக்கு முந்தைய 10 ஆண்டுகளில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மொத்தம் 1.53 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கப்பட்டது. மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கடந்த 10 ஆண்டுகளில் 5.48 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. அந்த ஆட்சியில் வழங்கப்பட்டதை விட இது மூன்றரை மடங்கு அதிகம் ஆகும்.
உட்கட்டமைப்பிற்கு ரூபாய் 1.43 லட்சம் கோடி, சாலைகளுக்கு ரூபாய் 63 ஆயிரம் கோடி, ரயில்வே துறைக்கு ரூபாய் 77 ஆயிரம் கோடி, 11 மருத்துவ கல்லூரிகளுக்கு 2 ஆயிரம் கோடி, வீடுதோறும் குடிநீர் திட்டத்திற்கு ரூபாய் 1.11 லட்சம் கோடி என ஏராளமாக தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நாங்கள் செய்ததில் எங்களுக்கு முழு திருப்தி உள்ளது.
சட்டம் ஒழுங்கு மோசம்:
திமுக ஆட்சியில் சட்டம் -ஒழுங்கு மோசமாக இருப்பதால் தமிழ்நாட்டிற்கு பெரிய முதலீடுகள் வராமல் உள்ளது. திமுக அரசு தன் பங்கை ஆற்றத் தவறிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டமன்ற தேர்தல்:
அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வலுவான கூட்டணியை அமைக்கும் நிலையில், திமுக-வை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
அதிமுக தலைமையில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளது. இவர்கள் தங்கள் கூட்டணியை வலுப்படுத்த மேலும் சில கட்சியினரை கூட்டணியில் இணைக்க முடிவு செய்துள்ளனர். இந்த சூழலில், அமித்ஷா தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான திமுக-வை சரமாரியாக விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.