கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தமிழ்நாடு முழுவதும் பெருமளவில் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் மட்டும் 7130 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் சென்னையில் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சென்னை மாநகராட்சி ஆணையராக பிரகாஷ் இருந்து வந்தார். தற்போது அவரை மாற்றி மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை தமிழக அரசு நியமித்துள்ளது.
யார் இந்த ககன்தீப் சிங் பேடி? பேரிடர் மேலாண்மைக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு என்ன?
1968-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் ஹோசிர்பூர் பகுதியில் ககன்தீப் சிங் பேடி பிறந்தார். இவருடைய தாய்-தந்தையர் இருவரும் கல்லூரி பேராசிரியர்களாக பணிபுரிந்தனர். அதனால் படிப்பு மீது ககன்தீப் சிங் பேடிக்கு சிறு வயது முதல் நாட்டம் இருந்தது. இவர் எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றார். அதில் சிறந்து விளங்கி தங்கப்பதக்கமும் வென்றார். அதன்பின்னர் 1991-ஆம் ஆண்டு வரை தாபர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். அதன் பின்பு 1991-ஆம் ஆண்டு இந்திய பொறியியல் பணிக்கான தேர்வில் தேர்ச்சி அடைந்து பணிபுரிந்து வந்தார்.
இருப்பினும் சிறு வயது முதல் அவருடைய மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் செய்து வந்த மாவட்ட வளர்ச்சி பணிகளை பார்த்து ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. இதன் காரணமாக 1992-ஆம் ஆண்டு குடிமைப்பணிகள் தேர்வை எழுதியுள்ளார். அதில் மூன்று நிலைகளையும் கடந்து 1993-ஆம் ஆண்டு அகில இந்திய அளவில் 20-ஆவது இடம் பிடித்தார். அத்துடன் தமிழ்நாட்டு பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார். ஐ.ஏ.எஸ் பயிற்சியின் போதே சிறந்த பயிற்சி ஐஏஎஸ் என்ற விருதை வென்று அசத்தினார்.
முதலில் சிவகாசி, சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் துணை ஆட்சியராக இருந்தார். அதன்பின்னர் கடலூரில் கூடுதல் ஆட்சியராக வளர்ச்சி பணிகளை பார்த்து வந்தார். பின்னர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக இருந்தார். அப்போது அங்கு அவர் எடுத்த சுற்றுச்சூழல் தொடர்பான நடவடிக்கைகள் மிகவும் பாராட்டப்பட்டது. அதன்பின்னர் 2004-ஆம் ஆண்டு முதல் கடலூர் மாவட்ட ஆட்சியராக பணியமர்த்தப்பட்டார். அப்போது டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமியில் அங்கு பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டது.
உடனடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்த பேடி 48 மணிநேரம் அயராது தூக்கம் இல்லாமல் பணியாற்றினார். பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தார். அத்துடன் அப்போது இறந்த மக்களின் உடல்களை மொத்தமாக அடக்கம் செய்ய மக்களிடம் பேசி ஒப்புதலையும் பெற்றார். மேலும் கடலூர் ஆட்சியராக இருந்த போது மக்களின் குறைகளை வேகமாக தீர்த்த அதிகாரி என்று முதலமைச்சரிடம் இருந்து பாராட்டை பெற்றார். 2006-ஆம் ஆண்டு இவருக்கு இந்திய செஞ்சிலுவை சங்கம் சிறந்த மாவட்ட ஆட்சியர் என்ற விருதை வழங்கி கௌரவித்தது. அதன் பின்னர் மாற்றப்பட்ட அனைத்து இடங்களிலும் சிறப்பாக பணியாற்றி அசத்தினார். மேலும் தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு பணியாமல் நேர்மையாக நிர்வாகத்தை கையாண்டார். இதனால் திமுக, அதிமுக ஆகிய இரு ஆட்சிகளிலுமே இவர் முக்கியத்துவம் பெற்றார்.
இவர் மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த போது ரிங்க் ரோடு சாலை திட்டத்தை வேகமாக முடித்தார். 2013-ஆம் ஆண்டு வருவாய் துறையில் இருந்த போது ‘அம்மா திட்டம்’ என்ற திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி மக்களின் குறைகளை தீர்த்தார். இதற்காக ஆகஸ்ட் 15-ஆம் தேதி விருதையும் பெற்றார். இதைவிட 2014-ஆம் ஆண்டு இவர் செய்த இவரை கடலூர் மக்கள் எப்போதும் போற்ற முக்கிய காரணமாக அமைந்தது. 2004-ஆம் ஆண்டு கடலூர் ஆட்சியராக இருந்தபோது வாலாஜா ஏரி வறண்டு கிடப்பது தொடர்பாக இவர் அறிந்து கொண்டார். அங்கு 1664 ஏக்கர் பரப்பளவில் இருந்த ஏரி வரண்டு போவாதற்கு காரணம் நெய்வேலி நிலகரி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் என்று தெரிந்துகொண்டார். இதனால் அந்த வாலாஜா ஏரியை மீண்டும் மீட்கப் பணிகளை தொடங்கினார். எனினும் அப்போது அவருக்கு அரசு சார்பில் எந்தவித ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. நெய்வேலி நிலகரி சுரங்க அதிகாரிகளுடன் தொடர்ந்து இந்த ஏரி குறித்து வலியுறுத்தி வந்தார்.
பேடிக்கு ஆதரவாக கடலூர் மாவட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதன்பின்னர் தமிழ்நாடு அரசும் இந்த விவகாரத்தில் தீவிரம் காட்ட தொடங்கியது. 2014-ஆம் ஆண்டு சுமார் 13 கோடி செலவில் எந்த ஏரியை புணரமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது புணரமைக்கப்பட்ட ஏரியிலிருந்து 12 ஆயிரம் ஏக்கர் புன்செய் நிலங்கள் நீர் பாசன வசதியை பெற்றது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பேடிதான். அதனால் அந்த ஊர் மக்கள் அவரை கடலூரின் பென்னிகுவிக் என்று போற்றும் அளவிற்கு மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார். பஞ்சாப் காரர் என்று சொல்வதை விட அவர் ஒரு கடலூர்வாசி என்றே சொல்லும் அளவிற்கு அங்கு பிரபலம் ககன்தீப் சிங் பேடி பிரபலம் அடைந்தவர். 2016-ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி துறையின் செயலாளராக இருந்தபோது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை திறன்பட செயல்படுத்தினார். அதற்காக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இடமிருந்து தேசிய விருதையும் பெற்றார்.
நிர்வாகத்தில் மட்டுமல்லாமல் பேரிடர் காலங்களிலும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரியாகவும் இருந்தார். 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது கடலூரில் சிறப்பாக நிவாரண பணியை மேற்கொண்டார். அதன்பின்னர் 2016 வர்தா புயல் மற்றும் 2017-ஆன் ஆண்டில் ஒக்கி புயல் என இரண்டிலும் மீண்டும் நிவாரண பணியில் ஈடுபட்டார்.
2019-ஆம் ஆண்டு முதல் வேளாண் துறையின் செயலாளராக இருந்து வந்தார். அங்கும் தனது நடவடிக்கையால் 16 லட்சம் தமிழக விவசாயிகள் பிரதமரின் வேளாண் காப்பீட்டு திட்டத்தில் இணைய வழிவகை செய்தார். 2020-ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்பு காலங்களிலும் கடலூர் மாவட்டத்திற்கு மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார். தற்போது மீண்டும் சென்னையில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துவரும் சூழலில் சென்னை மாநகராட்சி ஆணையராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.