அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 50 சதவீத வரி காரணமாக, இந்தியாவிற்கு பல்வேறு வகைகளில் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடியிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கடல் உணவுகளை, அந்நாட்டு வர்த்தகர்கள் பாதி வழியில் திருப்பி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதியில் திருப்பி அனுப்பப்பட்ட கடல் உணவுகள்
தூத்துக்குடியிலிருந்து, 600 கண்டெய்னர்களில் சுமார் 500 டன் இறால், கணவாய் உள்ளிட்ட கடல் உணவுகள் கண்டெய்னர் கப்பல் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், வரி காரணமாக அந்நாட்டு வர்த்தகர்கள் அந்த கப்பலை பாதியில் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால், தமிழகத்தை சேர்ந்த கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்ள்ளனர்.
எங்கள் உத்தரவை மீறி கப்பல் அமெரிக்காவுக்கு வந்தால், டெலிவரி எடுக்க மாட்டோம் என்று அந்நாட்டு வணிகர்கள் கூறியதால், வேறு வழியின்றி கப்பல் பாதி வழியில் தூத்துக்குடிக்கு திரும்பி வந்துக்கொண்டிருக்கிறது.
கோடிக்கணக்கில் நஷ்டமடைந்த தமிழக ஏற்றுமதியாளர்கள்
இந்திய கடல் பகுதியில் கிடைக்கும் முதல் தர இறால்கள் வெளிநாடுகளுக்கு தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவுக்கு தூத்துக்குடியிலிருந்து நிறைய கப்பல்கள் செல்கின்றன. கடல் உணவு பொருட்களை சாதாரண கண்டெய்னர்களில் ஏற்றி அனுப்பினால், உணவு கெட்டுப் போய்விடும். அதனால், அதற்கென தனியாக ரீஃபர் கண்டெய்னர்கள் பயன்படுத்தப்படுகின்றன. 40 அடி ரீஃபர் கண்டெய்னர் ஒன்றை அமெரிக்காவுக்கு அனுப்ப, சராசரியாக 8.81 லட்சம் ரூபாய் செலவாகும். அப்படியானால், தற்போது சென்ற 600 கண்டெய்னர்களுக்கு, குறைந்தபட்சம் 35 முதல் 50 கோடி ரூபாய் வரை செலவாகும்.
மார்க்ஸ், ஹபக்-லாய்டு என இருபெறும் கப்பல் நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை அடிக்கடி மாற்றியமைக்கின்றன. சர்வதேச அளவில் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து இந்த கட்டணங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. அதனால், மேற்சொன்ன கட்டணம் அடிப்படையானதுதான்.
இது தவிர அமெரிக்காவில் உள்ள மேற்கு கடற்கரையான லாஸ் ஏஞ்சல்ஸ் அல்லது கிழக்கு கடற்கரையான நியூயார்க்கிற்கு சரக்கு போகிறதா என்பதை பொறுத்தும் கட்டணங்கள் மாறும். எப்படிப் பார்த்தாலும், அமெரிக்காவின் வரி மூலம், தமிழக ஏற்றுமதியாளர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
கடல் உணவு ஏற்றுமதி கடுமையாக பாதிப்பு
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக கடந்த 2023-24-ம் ஆண்டு, 3 ஆயிரத்து 214 கோடி ரூபாய் மதிப்பிலான 73,822 டன் கடல் உணவு பொருட்கள், கண்டெய்னர்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பதப்படுத்தப்பட்ட இறால் ஏற்றுமதி குறைந்துவிட்டது.
அதனை ஈடுகட்டும் வகையில், அமெரிக்காவுக்கு பதப்படுத்தப்பட்ட இறால் ஏற்றுமதி அதிகரிக்கப்பட்டது. ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திடீரென இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்ததால், கடல் உணவு ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டில் இறால் ஏற்றுமதி 18% வரை குறைய வாய்ப்பு
இந்நிலையில், CRISIL நிறுவனத்தின் அறிக்கையின்படி, அமெரிக்கா விதித்த அதிக வரியால், இந்தியாவின் இறால் ஏற்றுமதி இந்த நிதியாண்டில் 15 முதல் 18 சதவீதம் வரை குறையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த 4 ஆண்டுகளாக வளர்ச்சி காணாமல் இருந்த கடல் உணவுத்துறை, மேலும் 18 முதல் 20 சதவீத வருவாய் இழப்பைச் சந்திக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு அமெரிக்கா அதிக வரி விதித்ததன் காரணமாக, வியட்நாம், பங்களாதேஷ், ஈக்வடார் போன்ற நாடுகளில் இருந்து வரும் கடல் உணவுகள், இந்திய கடல் உணவுகளை விட மிகவும் மலிவானதாக மாறியிருக்கிறது. இந்த நாடுகள், அமெரிக்க கடல் உணவுத் துறையில், இந்தியாவின் இடத்தை கைப்பற்றியிருக்கின்றன.