ஆம்பூர் அருகே சபரிமலை சென்று வீடு திரும்பியபோது, தேநீர் அருந்துவதற்காக சாலையை கடக்க முயன்ற பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருத்தணி அடுத்த முருகம்பட்டு பகுதியை சேர்ந்த சிறுவர்கள் உட்பட்ட 36 பேர் கொண்ட குழுவினர் மாலை அணிந்து சபரிமலைக்கு சென்று விட்டு மீண்டும் திருத்தணி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது, இன்று காலை (19ஆம் தேதி) திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர், சிட்கோ பகுதியில் சாலையோரம் பேருந்தை நிறுத்திவிட்டு, பக்தர்கள் தேனீர் குடிப்பதற்காக சாலையைக் கடந்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற சரக்கு வாகன ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் சாலையில் சென்ற கண்டெய்னர் லாரியின் பக்கவாட்டில் மோதி பின்னர் சாலையை கடந்த 4 ஐயப்ப பக்தர்கள் மீது சரக்குவாகனம் மோதியுள்ளது. இதில் கங்காதரன், சூர்யா ஆகியோர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர். மேலும் ஆதி, நரசிம்மன் ஆகியோர் படுகாயங்களுடன் வேலூர் அரசு மருத்துவக கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..
மேலும், இந்த விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய சரக்குவாகன ஓட்டுநரை தேடி வரும் நிலையில், சபரிமலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய ஐயப்ப பக்தர்கள் 2 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.