கிடப்பில் உள்ள அமராவதி வெள்ள உபரிநீர் திட்டம் செயல்படுத்தப்படுமா...? - விவசாயிகள் எதிர்பார்ப்பு

தாதம்பாளையம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல, அமராவதி வெள்ள உபரிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது. 18 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Continues below advertisement

அமராவதி ஆற்றில் இருந்து தாதம்பாளையம் ஏரிக்கு, தண்ணீர் கொண்டு செல்ல கிடப்பில் உள்ள அமராவதி வெள்ள உபரிநீர் திட்டத்தை, செயல்படுத்த வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “கரூர் மாவட்டம், பவித்திரம் பஞ்சாயத்தில் கடந்த, 1881ம் ஆண்டில், 360 ஏக்கர் நிலப்பரப்பில் தாதம்பாளையம் ஏரி உருவாக்கப்பட்டது. அமராவதி ஆற்றின், பிரதான பள்ளப்பாளையம் ராஜவாய்க்காலில், தண்ணீர் இல்லாத போது, தாதம்பாளையம் ஏரி தண்ணீர் மூலம், 3,000 ஏக்கர் நிலத்தில் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. காலப்போக்கில் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால், ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. பின், பொதுப்பணித்துறை வசம் இருந்த, ஏரி தற்போது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

Continues below advertisement


கடந்த, 2002ல் நஞ்சை தலையூர் முட்டணையில் இருந்து, தாதம்பாளையம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல, அமராவதி வெள்ள உபரிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது. 18 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றன. இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது, ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் மழைநீர், ஆரியூர் வழியாக உப்பாறு என்ற பெயரில், அமராவதி ஆற்றில் கலந்தது. அதை தடுக்க ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டது தான் தாதம்ப்பாளையம் ஏரி. தற்போது, சீமை கருவேல மரங்கள் முளைத்து வறண்ட நிலையில் உள்ளது.

அமராவதி ஆற்றில் ஓடும் தண்ணீரை, தாதம்பாளையம் ஏரிக்கு கொண்டு செல்ல வேண்டும் என கடந்த, 1950 முதல் போராடி வருகின்றோம். அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் கிடப்பில் உள்ளது. இறுதியாக கடந்த, 2002ல், 16 கோடி ரூபாய் மதிப்பில், அமராவதி ஆறு நஞ்சை தலையூர் முட்டணையிலிருந்து, தாதம்பாளையம் ஏரிக்கு, தண்ணீர் கொண்டு செல்ல போடப்பட்ட திட்டமும் கிடப்பில் உள்ளது. இதனால், கடந்த ஜூன் மாதம் முதல் அமராவதி ஆற்றில் வந்த, தண்ணீர் காவிரி ஆறு வழியாக கடலுக்குச் சென்று விட்டது. இதனால், அமராவதி வெள்ள உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 


அதன் மூலம், சின்ன முத்தாம்பாளையம் குளம், ஆரியூர் குளம், நல்லி செல்லிபாளையம் குளம், தொட்டிவாடி குளம், நிமித்தப்பட்டி குளம், கழுவம்பாளையம் குளங்களில் தண்ணீர் தேங்கும். இதனால், 75க்கும் மேற்பட்ட கிராமங்களில், நிலத்தடி நீர் மற்றும் கிணறுகளில் நீர்மட்டம் அதிகரிக்கும். மேலும், 15 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்” என்று கூறினர்.

 

மாயனூர் கதவணைக்கு குறைந்த தண்ணீர் வரத்து

கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு, தண்ணீர் வரத்து, 9000 கனஅடியாக குறைந்தது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு, வினாடிக்கு, 17 ஆயிரத்து, 573 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 9,039 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. டெல்டா பாசன பகுதி குருவே சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 8,219 கனஅடி தண்ணீரும், மூன்று பாசன கிளை வாய்க்காலில், 820 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.


திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 831 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு, 975 கன அடியாக இருந்தது. கரூர் அருகே, பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 446 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம், 88.29 அடியாக இருந்தது.

திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 33.59 அடியாக உள்ளது. ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 26.46 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

Continues below advertisement