இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவரான ரா. அர்ஜுனமூர்த்தி இன்று மீண்டும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
தமிழக பாஜகவின் முன்னாள் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்தவர் அர்ஜுனமூர்த்தி. இவர் பாஜகவில் இருந்த நிலையில்தான் ரஜினி கட்சி தொடங்க இருப்பதாக கூறப்பட்டது. உடனடியாக தன்னுடைய பதவியில் இருந்து விலகி ரஜினியின் ஆரம்பிக்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார். பின்னர் அரசியலில் இருந்து ரஜினி பின்வாங்கிய நிலையில் அவர் இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியை தொடங்கினார்.
இந்நிலையில் அவர் இன்று மீண்டும் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இணைந்தார்.
அப்போது பேசிய அண்ணாமலை, “அர்ஜூன மூர்த்தி அவர்கள் நம்முடைய சித்தாந்தத்தை கொண்டவர். அவர் மீண்டும் நம் கட்சியில் இணைவதை வரவேற்கிறோம்.
மின்கட்டண உயர்வு தொடர்பாக கருத்து கேட்பதாக கூறுவது கபட நாடகம் போல் தோன்றுகிறது. கருத்து கேட்கிறோம் என்று கபட நாடகத்தை நிறுத்திவிட்டு ஏற்றிய மின்கட்டணத்தை குறைக்க வேண்டும். ஆன்லைன் ரம்மியால் 30 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதை உடனடியாக தடை செய்ய வேண்டும். இதற்கு கருத்து கேட்கிறோம் என்று கருத்து கேட்காமல், தடைசெய்ய வேண்டும். இலவசங்கள் வேண்டுமா வேண்டாமா என்பது பெரிய விவாதமாக உள்ளது. மோடி அவர்கள் வழங்கிய கேஸ் அடுப்பு , குடிநீர் வழங்குதல் இலவலசம் அல்ல.. அடிப்படை உரிமை” என்றார்.
பல்வேறு தொழில்களை நிர்வகித்து வரும் அர்ஜுனமூர்த்தி, பாஜகவின் தேசியத் தலைவர்களுடன் நெருக்கமாக இருந்துள்ளார். தமிழக பாஜக முன்னெடுத்த வேல் யாத்திரைக்கு முக்கிய காரணமாக இருந்தது அர்ஜுனமூர்த்தி தான் என்று சொல்லப்படுகிறது. இதற்கான விரிவான திட்டத்தை மாநிலத் தலைவர் எல்.முருகனிடம் அளித்ததாகவும் தெரிகிறது.
பாஜகவில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆர் எஸ் எஸ் சித்தாந்தமே அர்ஜுனமூர்த்திக்கு காரணமென கூறப்படுகிறது. பாஜவில் சேர்ந்த அர்ஜுனமூர்த்தி முதலில் அக்கட்சியின் வர்த்தகப்பிரிவு தலைவராக பதவி வகித்தார். பின்னர் அவர் பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவராக அவர் பதவி வகித்தார். அதன்பின்னர்தான் அவர் ரஜினியின் பக்கம் திரும்பினர்.
அர்ஜுனமூர்த்திக்கு பாஜகவின் தேசியத் தலைவர்கள் பலர் நெருக்கமானவர்கள் எனவும் சொல்லப்படுகிறது. அவரது மனைவி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பள்ளித்தோழி என்றும் சொல்லப்படுகிறது