கோவை சரக காவல்துறை டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது தற்கொலை பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பினாலும், விஜயகுமார் வாழ்ந்த வாழ்க்கை என்பது சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.


சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் எடுத்துக்காட்டு:


12ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில் பயின்று காவல்துறை பணியில் படிப்படியாக முன்னேறி டி.ஐ.ஜியாக உயர்ந்தவர் விஜயகுமார்.
தேனி மாவட்டம் அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர். தந்தையின் பெயர் செல்லையா. வி.ஏ.ஓ.வாக இருந்தவர். தாயார் ராஜாத்தி, பள்ளி ஆசிரியையாக பணியாற்றிவர். பெற்றோருக்கு ஒரு மகனாக பிறந்ததால், அவரை மருத்தவராகவோ, பொறியாளராகவோ ஆக்க அவர்கள் விரும்பினர்.


பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், இயந்திரப் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றார். சாதாரண கடைநிலை ஊழியரான தந்தையை பார்த்துப் வளர்ந்ததால், மாவட்ட அளவில் அதிகாரம் படைத்த ஓர் அரசு அதிகாரி ஆக வேண்டும் என கனவு கண்டார் விஜயகுமார்.
குறிப்பாக, காவல்துறை அதிகாரியாக வேண்டும் என அவர் விரும்பியதற்கு மற்றொரு காரணமும் உண்டு.


போடி கலவரம், தேவாரம் கலவரம், கஞ்சா விவசாயம் என தேனி மாவட்டத்தை சுற்றியும் குற்றம் நடைபெற்றதை கண்டு வெகுண்டெழுந்த விஜயகுமார், மக்களுக்கு முடிந்த உதவியை செய்ய வேண்டும் என எண்ணினார். இதனால் அவர் தேர்வு செய்த பாதைதான் காவல்துறை பணி.


குற்றங்களை கண்டு வெகுண்டெழுந்த விஜயகுமார்:


மாவட்ட அளவில் அதிகாரம் படைத்த போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி ஐபிஎஸ். எனவே, அந்தத் திசையில் பயணிக்கத் தொடங்கினார் விஜயகுமார். இருப்பினும், கல்லூரிப் படிப்பு முடிந்ததும் அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை.  சென்னையில் தங்கி குடிமைப்பணி தேர்வுகளுக்கு தயாராகும் அளவுக்கு அவரிடம் வசதி இல்லை. எனவே, ஏதாவது பணி செய்து கொண்டே, தேர்வுக்கு தயாராக முடிவு எடுத்தார் விஜயகுமார். 


அதற்காக, ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் ஜெராக்ஸ் கடையில் வேலைக்கு சேர்ந்தார். 12 மணி நேர வேலைப் பளுவுக்குப் பிறகு அவரால் தேர்வுக்கு படிக்க முடியவில்லை. எனவே, நான்கே மாதத்தில் அந்த வேலையை விட்டார்.


அதன் பிறகுதான், அரசு பணியில் சேர்ந்து குடிமைப்பணிக்கு தயாராகும் எண்ணம் அவருக்கு தோன்றியது. அதன்படி, கடந்த 1999ஆம் ஆண்டு, குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்தார். ஆனால், சரியாக படிக்கவில்லை. விளைவு தேர்வில் தோல்வி. ஆனால், அதே சமயத்தில் குரூப்-2 தேர்வுக்கும் விண்ணப்பித்திருந்தார் விஜயகுமார். ஆறு மாத, தீவிர பயிற்சிக்கு பிறகு, கடந்த 2000ஆம் ஆண்டு, இந்து சமய அறநிலையத் துறையில் ஆடிட் இன்ஸ்பெக்டர் பணியில் சேர்ந்தார். 


விடாது துரத்திய விஜயகுமாரின் கனவு:


தன்னுடைய லட்சியத்தில் முனைப்பாக இருந்த விஜயகுமார், அதே ஆண்டு, குரூப்-1 தேர்வு எழுதினார். முதற்கட்டம், மெயின், நேர்முகத் தேர்வுன என இரண்டு வருட நடை முறை முடிந்து 2002ஆம் ஆண்டு, முடிவுகள் வெளியானது. அதில், தேர்ச்சி பெற்று டி.எஸ்.பி. ஆனார். டி.எஸ்.பி ஆன பிறகும், குடிமை பணி தேர்வில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ். அதிகாரியாக வேண்டும் என்ற அவரது கனவு மட்டும் அவரை துரத்தி கொண்டே இருந்தது. 


தொடர்ந்து ஆறு முறை முயற்சி மேற்கொண்டு தோல்வியே பரிசாக கிடைத்தது. நான்கு முறை மெயின் தேர்வு வரையிலும், மூன்று முறை நேர்முகத் தேர்வு வரையும் சென்று தோல்வி அடைந்தார். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் கடைசியாக அவருக்கு 7ஆவது வாய்ப்பு கிடைத்தது. தொடர் முயற்சி, தீவிர பயிற்சியின் காரணமாக ஏழாவது முறை தேர்வில் வெற்றி பெற்றார். 


தேர்வுக்கு தயாராவதை காட்டிலும் அந்த காலகட்டங்களில் தான் கடந்து வந்த மன உளைச்சலின் வீரியம் அதிகம் என தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவரே கூறியிருக்கிறார். டி.எஸ்.பி-யாக பணிபுரிந்த ஆறு ஆண்டுகளில் ஈரோடு, திருவள்ளூர், சி.பி.சி.ஐ.டி., சென்னை ஆணையர் அலுவலகம், ஆவடி உட்பட ஆறு இடங்களுக்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். குடிமை பணி தேர்வுக்காக தயாராகி கொண்டிருந்ததால், ஆறு ஆண்டுகளில் ஆறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் விஜயகுமார்.


தொடர் சோதனைகளை எதிர்கொண்டாலும், அவற்றை சாதனையாக மாற்றி, இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து மறைந்துள்ளார் விஜயகுமார்.