தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தற்போது புதுச்சேரி மற்றும் தெலங்கானா மாநில ஆளுநராக இருக்கிறார். எம்.எல்.ஏ., எம்.பி தேர்தலில் போட்டியிட்ட தமிழிசை தோல்வியடைந்தாலும் தனது பாஸிட்டி எனர்ஜியை எப்போதும் விடாதவர்.


அதேபோல் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அவரை அதிகம் கலாய்த்தாலும் எதனையும் தனக்குள் ஏற்றிக்கொள்ளாமல் தன்னுடைய அடுத்தடுத்த வேலைகளில் பிஸியாக இருப்பவர்.




இந்நிலையில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சமீபத்தில் பேட்டி அளித்தார். அதில் தனது அம்மா குறித்தும், தனது பணிகள்குறித்தும் ஏராளமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.


அந்தப் பேட்டியில் பேசிய அவர், “ஆளுநராக மாறினாலும் என்னுடைய தினசரி நடவடிக்கைகளில் எந்தவித மாற்றமுமில்லை. அனைத்து நாள்களிலும் எனக்கு பணி இருக்கும். என்னுடைய அம்மா ராஜ் பவனில் இருந்தார். அப்பாவின் ஆதரவு அம்மாவுக்கு பெரிதாக இல்லை. அதனால் அவருக்கு எல்லாமே நான்தான்.


அம்மாவின் தியாகத்திற்கு ஈடு எதுவும் இல்லை. யாரும் நம் மீது குறை சொல்லாத அரசியல்வாதியாக இருக்க வேண்டுமென அம்மா கூறினார். அதனை நான் இன்றுவரை பாதுகாத்துவருகிறேன்.




அவரை கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ராஜ் பவனில் மகாராணி போல் வைத்திருந்தேன் அது எனக்கு மிகப்பெரிய திருப்தி. அவர் இறந்த பிறகு அவரது உடல் மின் மயானத்திற்குள் செல்வதற்கு தயாராக  இருந்தது. அப்போது நான் அம்மா அம்மா அம்மா என மூன்று முறை அழைத்தேன். ஏனெனில் மீண்டும் அப்படி அழைக்கமுடியாது.


கவலையை துடைத்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க வேண்டும் என அம்மா கூறுவார். அதனால்தான் தூத்துக்குடியில் தோல்வியடைந்த அன்று மாலையே பத்திரிகையாளர் சந்திப்பு வைத்தேன். எதுவாக இருந்தாலும் நான் கடந்துவந்துவிடுவேன்.




என் கணவரும் மகளும் சென்னையிலும், என்னுடைய மகன் கோயம்புத்தூரிலும் பணி செய்கிறார்கள். சென்னை செல்லும்போது கணவரையும் மகளையும், கோவை செல்லும்போது மகனையும் பார்ப்பேன்.


நான் ஸ்டூலில் ஏறி நின்று பத்திரிகையாளர்களிடம் பேசினேன். அதில் எனக்கு மிகவும் வருத்தம் என்னவென்றால் அதிமுகவை சேர்ந்த செய்தித் தொடர்பாளர் ஒருவர், அதனை கிண்டல் செய்யும்விதமாக ஒரு விவாதத்தில் பேசினார். நான் உயரத்தில் குள்ளமானவர்தான். ஆனால் அறிவிலோ செயலிலோ குள்ளம் கிடையாது.




சீப்பு வாங்கவில்லையா என என்னை பலர் கிண்டல் செய்து பேசினார்கள். அந்த வீடியோக்கள் எல்லாம் இன்னமும் இணையதளங்களில் இருக்கின்றன. என்னை துச்சமாக நினைத்த ஏளனமாக பேசிய அனைத்து அரசியல் தலைவர்களும் எதற்காகவாவது பரிந்துரைக்குமாறு என்னை தொடர்புகொண்டுதான் இருக்கிறார்கள். நான் கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டதை மறக்க வேண்டும் என நினைக்கிறேன். 


தெலுங்கு மக்கள் என்னை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். ஆண்கள் என்னை அக்கா என்றோ, தங்கச்சி என்றோ அழைக்கிறார்கள். அங்கு தமிழ் அக்கா, இங்கு தெலுங்கு அக்கா, மொத்தத்தில் இசை அக்கா.




கவர்னர் என கூப்பிட்டால் திரும்பி பார்க்க தோன்றாது. அக்கா என கூப்பிட்டால்தன் திரும்பி பார்க்க தோன்றுகிறது. பாஜகவை தமிழ்நாட்டி வளர்ப்பதற்கு வெறித்தனமாக உழைத்தேன். இன்னும் கொஞ்சம் ஆதரவு இருந்திருந்தால் சிறப்பாக செயல்பட்டிருக்கலாமோ என்ற ஆதங்கம் இன்னமும் இருக்கிறது” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண