வண்டலூர், செங்கல்பட்டில் செம்ம டிராபிக் ஜாம்.. குறைக்க ஐடியா கொடுத்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் பேருந்துகள், வண்டலூர் முதல் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்கின்றன. 

Continues below advertisement

செங்கல்பட்டு டோல்கேட்டிலும் சுங்க கட்டணத்தை ரத்து செய்வதன் மூலம் வண்டலூர் முதல் செங்கல்பட்டு சாலையில் போக்குவரத்துக்கு நெரிசலை கட்டுப்படுத்தலாம் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

தீபாவளி 'விளக்குகளின் திருவிழா' என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். இது நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. வீடுகள், விளக்குகள் மற்றும் தீபங்களால் ஒளிரும் அந்த நேரத்தில், பண்டிகை மனநிலையை உறுதியளிக்கும் துடிப்பான அலங்காரங்களால் தெருக்கள் பெருமை கொள்கின்றன. தீமையின் மீது நன்மையும், இருளுக்கு எதிராக ஒளியும் வெற்றி பெற்றதைக் குறிக்கும் வகையில் தீபங்களின் திருவிழாவாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

மற்ற பண்டிகைகளை போல் தீபாவளிக்காகவும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதற்காக, தமிழ்நாட்டில் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால்,  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் பேருந்துகள், வண்டலூர் முதல் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்கின்றன. 

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த செங்கல்பட்டு டோல்கேட்டிலும் சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நேற்று முன்தினம் (அக்டோபர் 28ஆம் தேதி) 1025 ஆம்னி பேருந்துகளில் 41,000 பயணிகள் பயணம் செய்தனர். அதேபோல, நேற்று (அக்டோபர் 29ஆம் தேதி) 1800 ஆம்னி பேருந்துகளில் 72,000 பயணிகள் பயணம் செய்தனர்.

இன்று (30.10.2024) 1600 ஆம்னி பேருந்துகளில் 64,000 பயணிகள் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்க அரசு எடுத்துள்ள சிறப்பு நடவடிக்கைகளுக்கு மிகுந்த பாராட்டு.

கோயம்பேடு, மதுரவாயில், பூந்தமல்லி போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் இன்றி பேருந்துகள் சிறப்பாக இயங்கியுள்ளன என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

எனினும், வண்டலூர் முதல் செங்கல்பட்டு டோல்கேட் வரை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் மிகவும் கவலையளிக்கக்கூடியது. இரண்டு மணி நேரத்திற்கும் மேல் வாகனங்கள் தாமதமாக சென்றுள்ளதால், பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

இதற்காக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்துவதற்கான ஏற்பாடுகள், நுழைவு கட்டணத்தை ரத்து செய்வது, மேலும் பேருந்துகள் உள்ளே வருவதற்கு கூடுதல் சாலைகளை அமைத்தல் ஆகிய ஏற்பாடுகள் மிகவும் முக்கியமாக இருக்கின்றன.

மேலும், செங்கல்பட்டு டோல்கேட்டிலும் சுங்க கட்டணத்தை ரத்து செய்வதன் மூலம் வண்டலூர் முதல் செங்கல்பட்டு சாலையில் போக்குவரத்துக்கு நெரிசலை கட்டுப்படுத்தலாம். இந்த முயற்சிகள் பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு உதவியாக இருக்கும். ஆகையால் அரசு  இதற்கு தக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.

Continues below advertisement