அனைத்து வகையான மாநில அரசுப் பணிகளுக்கும், இனி டிஎன்பிஎஸ்சியே தேர்வு நடத்தி தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான புதிய சட்டத் திருத்த மசோதாவை நிதி அமைச்சர் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசுத் துறைகளுக்கான வேலைவாய்ப்புகள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. டிஎன்பிஎஸ்சி (TNPSC) சார்பில், குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 3, குரூப் 4, கிராம நிர்வாக அலுவலர், குரூப் 8 எனப் பல்வேறு பதவிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இதில், மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகம், ஆவின், வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள், தங்கள் துறைக்குள்ளாகவே தனித்தனியாகத் தேர்வு நடத்தி ஆட்களைத் தேர்வு செய்து வந்தன.
இத்தகைய அரசுப் பணியாளர்கள் தேர்வில், பெரும்பாலும் பணம் கொடுத்தே தேர்வு நடைபெறுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாகத் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் தமிழக அரசின் மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகம், ஆவின், வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் காலியிடங்களை, டிஎன்பிஎஸ்சியே தேர்வு நடத்தி இனி நிரப்பும் என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதாவது அனைத்து வகையான மாநில அரசுப் பணிகளுக்கும், இனி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மட்டுமே தேர்வு நடத்தி தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் வகையில் புதிய சட்டத் திருத்த முன்வரைவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார்.
இதன்மூலம் பணம் கொடுத்து அரசு வேலை பெறும் போக்கு பெருமளவில் குறையும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக தமிழக வேலை தமிழர்களுக்கே என்ற அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு, அனைத்து வகையான அரசுப் பணித் தேர்வுகளுக்கும் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. இந்தத் தேர்வில் தேர்வர்கள் 40 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்