ஜல்லிக்கட்டுக்கு எதிரான விலங்குகள் நல அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.வி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை வழங்கியது.  அப்போது ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேரும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். 


அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து: 


இந்த தீர்ப்புக்கு பின் சென்னை பசுமைவழி சாலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர், “ ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த போது அதிமுக ஆட்சி சட்டம் பிறப்பித்தது. இது உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 24 மணி நேரத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இது மக்களுக்கு கிடைத்த வெற்றி, ஒரு நிலைப்பாட்டை எடுத்த மத்திய அரசுக்கு கிடைத்த வெற்றி, விலங்கின நல வாரியம் எடுத்த நிலைப்பாட்டிற்கு கிடைத்த வெற்றி, ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களுக்கு கிடைத்த வெற்றி இது. உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கை வழக்காக பார்க்காமல் வாழ்க்கையாக பார்க்கப்பட்டது. இதற்கு உறுதுனையாக இருந்தது எடப்பாடி பழனிசாமி” என குறிப்பிட்டார்.


தொடர்ந்து பேசிய அவர், “வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது, அதனை கட்டாயம் பின்பற்றுவோம். இனியாவது ஆன்லைன் டோக்கன் ரத்து செய்ய வேண்டும். ஓபிஎஸ் -க்கு இந்த வழக்கில் எந்த கிரெடிட் ம் இல்லை. ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததே காங்கிரஸ் தான். காங்கிரஸ் ஆட்சியில் கூட்டணியில் இருந்தது திமுக தான். அதனால் ஜல்லிக்கட்டு தடைக்கு திமுகவும் ஆதரவாக இருந்தது” என கூறினார்.


சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் கருத்து: 






உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “சமீபகாலத்தில் உச்சநீதிமன்ற வழக்கில் 4:1 அல்லது 3:2 போல் தீர்ப்பு வழங்கப்பட்டு வந்தது. 5 நீதிபதிகளும் ஒற்றை கருத்துக்களை ஏற்று தற்போது இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. தமிழனுடை பண்பாடு, கலாச்சாரம் காப்பற்றப்பட்டுள்ளது. அரசு எடுத்துரைத்த கருத்துக்களை வழக்கறிஞர்கள் நல்ல முறையில் முன்வைத்து நீதியரசர்கள் அதனை சிறந்த முறையில் ஏற்றுக்கொண்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின்  சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. தமிழ்ர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தோடு ஒன்றிப்போனது ஜல்லிக்கட்டு இதனை பிரிக்க முடியாது” என குறிப்பிட்டார்.


மேலும், “பாரம்பரியமாக இந்த விளையாட்டுகள் நடைபெற்று வருகிறது என்ற வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.  உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி, போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு இந்த போட்டிகளை நடத்தி வருகின்றோம்” என கூறியுள்ளார்.