ஹாமூன் புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. 


மத்திய மேற்கு வங்க கடலில் உருவான நேற்று உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ஹாமூன் என பெயரிடப்பட்டுள்ள நிலையில் வடகிழக்காக நகர்ந்து ஒடிசாவின் பாரதீப்பில் இருந்து 400 கி.மீ., தொலைவிலும், மேற்கு வங்கத்தில் திகாவிலிருந்து 550 கி.மீ., தென்மேற்கு திசையிலும் மையம் கொண்டிருந்த இப்புயல் ஒடிசா மாநிலத்தில் பல இடங்களில் மழைப்பொழிவை ஏற்படுத்தியுள்ளது. 


குறிப்பாக கடலோர மாவட்டங்களான கியோஞ்சர், மயூர் பஞ்ச் , அங்குல், கந்தமால், ராயகடா, தேன்கனல், ராயகடா, மல்கங்கிரி ஆகிய பகுதிகள் அதிகப்படியான மழையை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் வங்கதேசத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் இன்று மழையின் பாதிப்பு அதிகம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒடிசாவில் மாநில அரசு தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இப்புயல் நாளை (அக்டோபர் 25) வங்கதேசத்தில் உள்ள கெபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில்  2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது புயல் உருவாகியுள்ளது என எச்சரிக்கை விடுப்பதை குறிக்கும். அதேசமயம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆழ் கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். 


தேஜ் புயல் நிலை என்ன?


அரபிக் கடலில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில், அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மாறி பின் புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு தேஜ் என்ற பெயரிடப்பட்ட நிலையில், அது அதி தீவிர புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையை நோக்கி நகர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த 6 மணி நேரத்தில்  தேஜ் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏமன் நாட்டில் அல் கைதாவின் தெற்கு - தென்கிழக்கில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும், ஓமன் நாட்டின் சலாலாவின் மேற்கு- தென்மேற்கில் இருந்து 230 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 




மேலும் படிக்க: Cylonic Storms: தீவிர புயலாக மாறிய ஹமூன் புயல்.. கரையை கடக்கும் தேஜ் புயல்.. மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்..