எலக்ட்ரிக் பில் கட்டிய பிறகும் தொடர்ந்து உங்களுக்கு கட்டவில்லை என்று போன் வருகிறதா..? அல்லது நீங்கள் கட்டிய தொகை எங்களுக்கு அப்டேட் ஆகவில்லை என்று ஏதேனும் செயலியை ஏற்ற சொல்லி உங்களுக்கு மெசேஜ் வருகிறதா? உஷார்.. தமிழ்நாடு அரசின் பெயரை சொல்லி கொள்ளை அடிக்க ஒரு கும்பல் காத்திருக்கிறது.
பொதுமொபைல் எண்ணிற்கு கடந்த சில நாட்களாக எலக்ட்ரிக்சிட்டி என்ற பெயரில் மெசேஜ் வந்துள்ளது. அந்த மெசேஜில் உங்களது வீட்டில் உள்ள மின்சாரம் இன்று கட் செய்யப்படும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நபர் அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும், அந்த செல்போனை ’ட்ரூ காலர்’ (True Caller ) செயலில் சோதனை செய்து பார்த்தபோது, ஆங்கிலத்தில் எழுத்துப்பிழையுடன் ‘Electrlcity office’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, அந்த குறிப்பிடப்பட்டிருந்த நம்பருக்கு போன் செய்து பேசியபோது, ”சார்! நீங்கள் கடந்த முறை தங்களுக்கு வந்த மின்சாரக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் கட்டியுள்ளீர்கள் சரிதானே..?” என்று மறுமுனையில் பேசிய மர்மநபர் 3 முறை கேட்டுள்ளார். இதற்கு அவர், ” எத்தனை முறை சொல்வது ஆமாம், ஆன்லைன் மூலமாக தான் கட்டினேன் என்ன அதற்கு..? என்று கேட்டுள்ளார்.
அப்போது அந்த மர்மநபர், “ நீங்கள் மின்சாரக் கட்டணத்தை ஆன்லைன் வாயிலாக கட்டியுள்ளீர்கள். ஆனால், உங்களது மீட்டர் கனெக்ஷன் நம்பர் இன்னும் அப்டேட் ஆகாமல் உள்ளது” என்று தெரிவிக்க, அதற்கு இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று தொடர்பு கொண்ட நபர் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர், “ நீங்கள் ஒன்றும் கவலை படாதீர்கள், நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள்” ஒரு சில வழிமுறைகளை தெரிவித்துள்ளார்.
அவை பின்வருமாறு..
நீங்கள் முதலில் உங்கள் மொபைல் போனில் உள்ள ப்ளே ஸ்டோருக்கு சென்று ’ Bill update quick support' என்று தேடுங்கள் என்று சொல்லியுள்ளார். இதை ஃபாலோ செய்த நபர், “தமிழ்நாடு மின்சாரத்துறைக்கு அல்லவா சம்பந்தப்பட்டது. இதை நான் ஏன் ஏற்ற வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த மர்ம நபர், “ சார் நீங்கள் பணம் கட்டவில்லை என்று நான் சொல்லவில்லை. நான் நீங்கள் கட்டிய பணம் இன்னும் அப்டேட் ஆகவில்லை. அது அப்டேட் ஆவதற்காகவே இதை ஏற்ற சொல்கிறேன். நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள்” என்று கூற, அவரும் தொடர்ந்து அந்த மர்மநபர் சொல்வதை ஃபாலோ செய்துள்ளார்.
அதன்படி, ’ Bill update quick support' என்று தேடியபோது என்ன சார் வந்தது என்று அந்த நபர் கேட்க, அதற்கு எங்களுக்கு தெரிந்த நபர் ” 'TeamViewer QuickSupport' என்று வருகிறது” என்று தெரிவித்தார். அதை install செய்யுங்கள் என்று தெரிவிக்க, அப்போது இவர், ”போதும் நிப்பாட்டு, என்ன மாதிரியான மோசடி வேலை இது. என் வீடு ஒன்றும் அண்ணாநகர் பகுதியில் இல்லை. எதை வைத்து நான் நகர் பகுதியில் இருக்கிறேன் என்று கூறுகிறீர்கள். நீ சென்னையில் இருந்து போன் செய்வதாய் சொல்கிறாய். உங்களது எந்த பிராஞ்ச் அதை சொல்லுங்கள் முதலில்” என்று கேட்டுள்ளார்.
அப்போது அந்த மர்மநபர், “ அண்ணா நகர்” என்று தெரிவிக்க, ”சரி! உங்கள் பிராஞ்சின் முழுமையான அட்ரெஸை சொல்லுங்கள் நான் நேரில் வந்து அப்டேட் செய்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். இதை கேட்ட அந்த மர்மநபர், “ சரி நேரில் வாருங்கள்” என்று மட்டுமே கூற, அட்ரெஸை கூறவில்லை. இதற்கு பின் பேசிய அவர், “ நீங்கள் என்னிடம் சூப்பராக முயற்சித்தீர்கள். என்னிடம் இந்த வேலையெல்லாம் வேண்டாம், வேறு யாரிடமாவது ட்ரை செய்யுங்கள்” என்று போனை கட் செய்துள்ளார்.
பொதுமக்கள் கவனத்திற்கு...
இரண்டு மாதத்திற்கு ஒருமுறை உங்களுக்கு வரும் மின்சாரம் தொடர்பான பில்லை நீங்கள் நேரடியாக ‘TNEB' என்ற வலைதளம் மூலமாகவோ அல்லது gpay, phonepe போன்ற பணம் அனுப்பும் செயலி மூலம் ‘TNEB' என்ற பக்கத்தில்தான் பணம் செலுத்த வேண்டும். இது மாதிரியான 10 இலக்க எண் வந்தால் தொடர்பு கொண்டு பேசிய வேண்டிய கட்டாயம் இல்லை. இதுபோன்ற முறையில் எங்களுக்கு தெரிந்த மற்றொரு நபரிடம் ரூ. 400 வரை பணம் பறிக்கப்பட்டது. உஷார் மக்களே!
இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ’மகளிர் உரிமைத் தொகை’ வராதவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்து, பலரிடம் பணம் மோசடி செய்யப்பட்டது. மேலும், மர்மநபர்கள் ஏற்ற சொல்லும் செயலிகள் (ஆப்கள்) மூலம் உங்கள் மொபைல் போன்கள் ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது, எனவே கவனமாக இருங்கள்.