நேற்று அட்சய திருதியை நாளை முன்னிட்டு சுமார் ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த விற்பனையில் நகைகள் 80 சதவீதமும், நாணயங்கள் 20 சதவீதமும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை 6 மணி முதல் நகை கடைகள் திறக்கப்பட்ட நிலையில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் நகை வாங்கிச் சென்றனர். 


நேற்று அட்சய திரிதியை முன்னிட்டு காலை 6 மணி அளவில், 22 காரட் மதிப்பு கொண்ட தங்கம் சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,280 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஒரு கிராம் விலை ரூ.45 உயர்ந்து ரூ.6,660 ஆக விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து ரூ.90 ஆக விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் கொண்ட தங்கம் விலை கிராம் ரூ.7,130 ஆகவும், சவரன் ரூ.57,040 ஆகவும் விற்பனையானது.


பின் யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக மீண்டும் காலை 8 மணிக்கு தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. ரூ.360 உயர்ந்து 22 கேரட் ஆபரணத் தங்கம், சவரனுக்கு ரூ.53,640 ஆக விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் கிராம் ஒன்று ரூ. 45 உயர்ந்து ரூ. 6,705 ஆக விற்பனை செய்யப்பட்டது.


நேற்று காலை 6 மணி முதலே நகை கடைகள் திறக்கப்பட்ட நிலையில் மக்கள் ஆர்வத்துடன் தங்கம் வாங்க குவிந்தனர். கடந்த சில மாதங்களாக தங்கம் விலை கடுமையாக உயர்ந்தாலும், நேற்று விற்பனை கலைக்கட்டியது என்றே சொல்லலாம். தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 14,000 கோடிக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.