நடிகர் அஜித்தின் வீட்டிற்கு முன்பாக தீக்குளித்து தற்கொலை செய்துக்கொள்ள முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தார். அப்போது அஜித்தின் தீவிர ரசிகையான ஒரு பெண், அவர்கள் இருவரும் நடந்து வருவதை வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்து அந்த பெண் சிசிடிவியில் வீடியோ எடுப்பதை அவர் வேலை செய்த மருத்துவமனை நிர்வாகம் பார்த்துவிட்டது. அதனைத் தொடர்ந்து அந்தப் பெண் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
பின்னர் மருத்துவமனை நிர்வாகத்திடம் தனது செயலுக்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி அந்த மருத்துவமனை நிர்வாகத்திடம் அந்த பெண்ணுக்கு மீண்டும் பணி வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் அந்தப் பெண்ணுக்கு மீண்டும் பணி வழங்கியது. ஆனால் அதன் பின்னர் மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு எந்த வேலையும் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கொரோனாவின் காரணமாக ஆட்குறைப்பு செய்த மருத்துவமனை நிர்வாகம் அந்த பெண்ணையும் வேலையிலிருந்து பணி நீக்கம் செய்துள்ளது. இது தொடர்பாக ஷாலினியிடம் மீண்டும் பேசியிருக்கிறார் அந்தப் பெண். அப்போது மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசிய ஷாலினி, மருத்துவமனையில் அஜித்தை வீடியோ எடுத்ததற்காக பணி நீக்கம் செய்யவில்லை, ஆட்குறைப்பின் காரணமாகத்தான் நீக்கியிருக்கிறார்கள் என விளக்கமளித்திருக்கிறார்.
ஆனால் தனக்கு வங்கிக் கடன் உள்ள சூழலில் தன்னுடைய கல்விச்சான்றுகளை மருத்துவமனை நிர்வாகம் திரும்ப தரவில்லை என அந்த பெண் குற்றம்சாட்டினார். சான்றிதழ்கள் இல்லாததால் தன்னால் வேறு பணிக்கும் செல்ல முடியவில்லை என வருத்தம் தெரிவித்தார். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வேலை இல்லாமல் இருந்துள்ளார். அவருக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில்தான் நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவை அழைத்து தன்னுடைய நிலைமையை தெரிவித்துள்ளார். அஜித்திடம் பேசி தனக்கு உதவி செய்வதாக சுரேஷ் அதன் பிறகு மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் குழந்தையின் படிப்புக்காக உதவி செய்வதாக சொன்னதாக கூறப்படுகிறது. அதன் பிறகு தன்னை சுரேஷ் பிளாக் செய்த்தாக தெரிவித்தார் அந்தப்பெண். இதனால் தற்கொலைக்கு முயன்றார் அந்தப் பெண்.
இந்நிலையில் இன்று நடிகர் அஜித்தின் வீட்டிற்கு முன்பு அவர் மண்ணெண்ணை ஊற்றி மீண்டும் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி, அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர். அப்போது நடிகர் அஜித்தைக் காணாமல் இந்த இடத்தை விட்டு போக மாட்டேன் என அழுதுக்கொண்டே சொல்கிறார் அவர். மேலும் தன்னுடைய சாவிற்கு நடிகர் அஜித்தான் காரணம் என்றும் குறிப்பிடுகிறார். அதனைத்தொடர்ந்து அவரை வாகனத்தில் ஏற்றி போலீசார் கைது செய்தனர்.