கரூர் மாவட்டத்துக்கு ஜூலை 2-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளதையடுத்து தொழில் நிறுவனங்கள் சார்பில் எடுத்துரைக்க வேண்டிய கோரிக்கைகள் குறித்து கலந்த ஆலோசனை கூட்டம் ஹோட்டல் ஹேமலாவில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, மேயர் கவிதா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், கரூர் மாவட்டத்துக்கு ஜூலை 1-ஆம் தேதி மாலையில் முதல்வர் வர இருப்பதால், சுற்றுலா மாளிகையில் தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. ஆகையால், வர்த்தக சங்க கூட்டமைப்புகள் தனித்தனியாக கோரிக்கை மனுக்கள் கொடுக்காமல், அதற்குரிய தொழில் நிறுவனங்களில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சார்பில் 4 அல்லது 5 பேர் கொண்ட குழுவாகச் சென்று மனுக்களை கொடுக்க அதற்குரிய ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக செய்யப்பட்டுள்ளன என்றார்.
மேலும், கரூர் மாவட்டத்தில் ஜவுளி ஏற்றுமதி தொழில் உலக அளவில் தரத்திலும் புகழ்பெற்று விளங்குகிறது. இந்நிலையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் நீண்ட நாள் கோரிக்கையான விமான நிலையம் கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்திலேயே வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக பேசினார்.
இந்த விமான நிலையம் வருகையால் மேலைநாடுகளில் உள்ள வியாபாரிகள் கரூர் ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வரும் போது, நிறுவனத்தை நேரில் பார்க்கும் போது ஏற்றுமதி நிறுவனத்தின் மீது நம்பிக்கை அதிகம் வரும். மேலும், அவர்கள் மதுரை அல்லது திருச்சி வந்து கரூர் வர வாய்ப்பில்லை. இதனால் நிச்சயம் கரூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என கரூர் மாவட்ட வர்த்தக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வாக்குறுதி கொடுத்தார்.
மேலும், கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தொழில் நிறுவனங்கள் கூட்டு முயற்சியால் பல்வேறு பயனுள்ள பணிகள் நடைபெற்றுள்ளது. இதனால், கோவை தற்போது தொழில் நகரத்திலும், பல்வேறு வளர்ச்சித் திட்டத்திலும் சிறந்து விளங்குகிறது. அதேபோல், கரூர் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொதுமக்களுக்கானபல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கூட்டத்தின் வாயிலாக மின்சாரத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மேலும், கரூர் மாவட்டத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட தொழில் பூங்கா அமைக்க மாவட்ட நிர்வாகம் முழு முயற்சியுடன் இடங்களை பார்வையிட்டு வருவதாகவும் தெரிவித்தார். கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்ட நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் மந்தராசலம், கரூர் மாநகராட்சி ஆணையர் என்.ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தண்டபாணி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன் உள்ளிட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்