தமிழ் திரையுலகின் முன்னணி ஜாம்பவான் காமெடியன் வடிவேலுவுடன். இவருடன் இணைந்து பல்வேறு காமெடிகளில் இணைந்து நடித்தவர் வெங்கல்ராவ்.


ஸ்டண்ட் மாஸ்டர் டூ காமெடி நடிகர்..


சண்டைக்கலைஞராக சினிமாவில் கால்பதித்த வெங்கல்ராவ், சண்டைக்காட்சியின் போது ஒரு விபத்தில் சிக்கினார். அதன்பின்னர் சண்டைக்கலைஞர் வேண்டாமென தீர்மானித்து நடிகராக தொடர்ந்தார்.தமிழ், தெலுங்கு படங்களில் பணியாற்றத் தொடங்கிய இவர், வடிவேலுவுடன் இணைந்து காமெடி நடிகராக மிகவும் பிரபலமானார். வடிவேலுவுடன் இணைந்து கந்தசாமி படத்தில் இடம்பெற்ற தேங்காய் காமெடி, தலைநகரம் படத்தில் இடம்பெற்றுள்ள சிறையில் நடக்கும் காமெடி, வடிவேலு இவர் தலையில் கையை வைத்து படாதபாடுபடும் காமெடி என்று வடிவேலுவுடன் இவர் இணைந்து நடித்த அனைத்து நகைச்சுவை காட்சிகளும் மிகவும் பிரபலம்.


தொடர் சிகிச்சை..


இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே வெங்கல்ராவ் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த நிலையில், விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆந்திராவைப் பூர்வீகமாக கொண்டவர் என்பதால் விஜயவாடாவிலேயே சிகிச்சைப் பெற்று வருகிறார் வெங்கல்ராவ். ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட வெங்கல்ரா தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருகிறார்.




உதவி கிடைக்குமா?


வடிவேலு டீமில் கலக்கி வந்தாலும் வறுமையிலேயே வாடினார் வெங்கல்ராவ். வடிவேலு கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காத காரணத்தால் அவருடன் இணைந்து நடித்த பல துணை நடிகர்களும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகினர். அவர்களில் நடிகர் வெங்கலராவும் ஒருவர். தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் வெங்கல்ராவ் விரைவில் குணமடைய வேண்டுமென்றும், அவருக்கு திரைத்துறையினர் உதவி செய்ய வேண்டுமென்றும் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வடிவேலுதான் எல்லாம்


முன்னதாக, ஒரு தனியார் யூட்யூப் சேனல் பேட்டியில் கூறுகையில், "நான் ஆந்திராவை சேர்ந்தவன், சினிமாவில் பைட் மாஸ்டாராக அறிமுகமானேன். 25 வருடங்களுக்கு பிறகு என்னால் சண்டை காட்சிகளில் நடிக்க எனது உடல் ஒத்துழைக்கவில்லை. அதன்பிறகு வடிவேலு சாரை சந்தித்து எனக்கு வாய்ப்பு கேட்டேன். அவரும் உடனே எனக்கு வாய்ப்பு கொடுத்தார். வடிவேலு அண்ணன் இல்லை என்றால் நான் இங்கு உட்கார்ந்திருக்க முடியாது என் வாழ்கையில் பெரிய உதவி செய்தவர் வடிவேலு அண்ணா.




என்னை மட்டுமல்ல பல பேரை வடிவேலு வாழ வைத்துள்ளார். அவருடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இப்போது சினிமாவில் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. நானும அவரிடம் போய் வாய்ப்பு கேட்கவில்லை. ஆனால் என் சிங்கம் இப்போது வரப்போகிறது. இனிமேல் எனக்கு கவலை இல்லை. என் சிங்கம் வந்த உடனே என்னை போன்று பலரும் சினிமாவில் நடிக்க வந்துவிடுவோம் என்றார்.