சென்னை மெரினா விமான சாகச நிகழ்வில், சுட்டெரிக்கும் வெயிலில் சுடும் மணலில் மக்கள் பரிதவிக்கும் நிலையில் மத்திய-மாநில அரசுகளும் அவர்களது குடும்பங்களும் மட்டும் பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்திருப்பது கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது என்று அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.


தள்ளுமுள்ளு போக்குவரத்து


சென்னை விமான சாகச நிகழ்ச்சி முடிந்த பிறகு எல்லா மக்களும் ஒரே நேரத்தில் வெளியே வரத் தொடங்கினர். கடற்கரையில் இருந்து காமராஜர் சாலைக்கு வர வெவ்வேறு வழிகள் இருந்ததால், அனைத்து வழிகளிலும் மக்கள் கூட்டம் சாரை சாரையாகப் படையடுத்தது. இதனால் ஏற்கெனவே வந்த கூட்டத்துடன் புதிதாக வந்தவர்களின் எண்ணிக்கையும் சேர்ந்தது. திரும்பச் செல்லும்போது போலீஸார் யாரும் போக்குவரத்தை ஒருங்கிணைக்காததால், நேரம் செல்லச் செல்ல கூட்டம் தள்ளுமுள்ளாக மாறியது.


30 பேர் மருத்துவமனையில் அனுமதி; ஒருவர் பலி


நண்பகலில் வெயிலும் கொளுத்தியதால், வியர்வை வழிந்து ஆறாகப் பெருகி ஓடியது. வயதானவர்களும் குழந்தைகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். தண்ணீர் அந்த நேரத்தில் எங்கும் விற்கப்படவில்லை. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். சிலர் மயக்கம் அடைந்து விழுந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் பலியானார். 


இந்த நிலையில் இதுகுறித்து ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:


‘’சென்னை மெரினா விமான சாகச நிகழ்வில், சுட்டெரிக்கும் வெயிலில் சுடும் மணலில் மக்கள் பரிதவிக்கும் நிலையில் மத்திய-மாநில அரசுகளும் அவர்களது குடும்பங்களும் மட்டும் பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்திருப்பது கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது.


காவல்துறை- மக்கள் இடையே வாக்குவாதம்


ரயில்களில் மக்கள் தொங்கியபடி பயணம் செய்தனர். ஆனால் அரசுப்  பேருந்துகளை காணவில்லை. முறையான முன்னேற்பாடுகளை அரசு ஏற்படுத்தாத காரணத்தால் காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நிகழ்ந்தன.






இரண்டு‌ நாட்களுக்கு முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் பணிச் சுமையின் காரணமாக உயிரிழந்தார். காவல் துறையினருக்கு அதிக வேலையும் அழுத்தமும் கொடுப்பது வேதனைக்குரியது! நிர்வாகம், கிலோ எவ்வளவு? எனக் கேட்கக் கூடிய முதலமைச்சராகத்தான் ஸ்டாலின் உள்ளார்’’.


இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.