தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கப்பட்டதால் காற்றின் தரம் மோசமான நிலைமைக்கு சென்றுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று (நவம்பர் 12) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நடப்பாண்டு தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வந்த நிலையில் அதன் கொண்டாட்டங்கள் நவம்பர் 10 ஆம் தேதியே தொடங்கி விட்டது. அன்று மாலை முதலே பட்டாசுகள், வாண வேடிக்கைகள் வெடிக்கப்பட்டு தீபாவளி களைகட்ட தொடங்கிவிட்டது. அப்படி என்றால் சொல்லவா வேண்டும் எங்கு திரும்பினாலும் பட்டாசு சத்தம் தான்.
வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். முன்னதாக இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணிநேரம், மாலை ஒரு மணிநேரம் என இரண்டு மணி நேரம் மட்டுமே உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனை அந்தந்த மாநில அரசு அவரவர் வசதிகேற்ப நேர கட்டுப்பாட்டை அமல்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தியது.
அதன்படி தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலையில் 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்தது. இதனை பின்பற்றி காவல்துறையினரும் கட்டுப்பாடு விவரங்களை வெளியிட்டனர். ஆனால் அதையும் மீறி தடை செய்யப்பட்ட நேரங்களில் கூட பட்டாசு வெடிப்பது நடந்தேறியது. போலீசாரும் இதுதொடர்பாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம் பட்டாசு வெடித்ததால் சென்னை முழுவதும் ஒரே புகை மூட்டமாக காட்சியளித்தது. சாலையில் எதிரே வருவோர் தெரியாத அளவுக்கு புகை இருந்ததால் மக்கள் அவதியடைந்தனர். தலைநகர் சென்னையை பொறுத்தவரை மணலி தான் மிக மோசமாக காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அங்கு காற்றின் தரம் 322 ஆக இருந்தது. 0 முதல் 100 வரை மட்டுமே காற்றின் தரம் ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு மேல் சென்றால் மோசமான விளைவுகள் ஏற்படும் நிலையில் சென்னை திக்குமுக்காடியது. ஆலந்தூரில் 256, வேளச்சேரியில் 308, அரும்பாக்கத்தில் 256, ராயபுரம் 252, கொடுங்கையூர் 126, கும்மிடிப்பூண்டி 255, செங்கல்பட்டு 231, வேலூர் 180, கடலூர் 175, புதுச்சேரி 164, சேலம் 142 என காற்றின் தரம் இருந்தது.
தமிழ்நாட்டில் மிக குறைந்த காற்று மாசுபாடு நீலகிரியில் (20) தான் பதிவானது. மேலும் தமிழ்நாடு மட்டுமல்லாது பீகாரில் காற்றின் தரம் 397 என்ற மோசமான நிலையை அடைந்தது. அதேபோல் திருப்பதி 395, புவனேஸ்வர் மற்றும் கொல்கத்தா 375, டெல்லி 305, மீரட் 320, குருகிராம் 311 என காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.