தமிழ்நாடு அரசின் சார்பில் அரசுமுறைப் பயணங்களுக்காக பயன்படுத்தப்படுவதற்காக ஹெலிகாப்டர் உள்ளது. முதலமைச்சரின் சுற்றுப்பயணங்களுக்காக, வெள்ளகாலங்களில் முதல்வர் மேற்பார்வையிடுவதற்காக இந்த ஹெலிகாப்டர் உள்ளது. கடந்த 2005ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பெல் 412 இபி என்ற ரக ஹெலிகாப்டரை தமிழ்நாடு அரசு பயன்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் வசம் உள்ள இந்த ஹெலிகாப்டர் தற்போது சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஹெலிகாப்டர் பயன்பாடின்றி உள்ளது.
இந்த நிலையில், முதல்வரின் அரசுமுறை பயணங்களுக்காக வாங்கப்பட்ட இந்த ஹெலிகாப்டரை பேரிடர் காலங்கள் மற்றும் அவசர காலங்களுக்கு பயன்படுத்தும் வகையில் தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. மேலும், இந்த ஹெலிகாப்டரை மருத்துவ அவசரங்களுக்காக பயன்படுத்தவும் தமிழக அரசு ஆலோசித்துள்ளது.
சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இதுதொடர்பாக தீவிரமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி மக்களின் உயிர்காக்கும் பொருட்டு அவசரகால ஏர் ஆம்புலன்சாக இந்த ஆம்புலன்சை பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான இந்த ஹெலிகாப்டர் 14 பேர் வரை பயணிக்கும் வசதி கொண்டது. 2005ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர் இதுவரை 2 ஆயிரத்து 449 மணி நேரங்கள் மட்டுமே வானில் பறந்துள்ளது. இந்த ஹெலிகாப்டரை ஏர் ஆம்புலன்சாக மாற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழு தற்போது ஏர் ஆம்புலன்சாக மாற்றுவதில் உள்ள சாத்தியக்கூறுகள், சிரமங்கள் குறித்த ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் ஹெலிகாப்டர் தரை இறங்கும் வசதிகள், மருத்துவமனைகளில் இறங்குவதற்கான கட்டமைப்புகள் வசதிகள், அதற்கான செலவுகள் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். தனியார் மருத்துவமனைகள் கடந்த 2017-ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் ஏர் ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்திய நிலையில், தமிழக அரசு தமிழக மக்களுக்காக இந்த திட்டத்தை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது.
இந்தியாவிலே இதுவரை கர்நாடக மாநிலத்தில் மட்டும் அரசு சார்பில் ஏர் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் எடியூரப்பா கடந்தாண்டு இந்த வசதியை அந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைகளுக்கு மிகவும் விரைவாக அழைத்துச் செல்வதற்காக மருத்துவ வசதிகளுடன் கூடிய ஹெலிகாப்டர்கள் ஏர் ஆம்புலன்சாக பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.