மத்திய அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்திற்கு அதிமுகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.


நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே விதமான நடைமுறையை அறிமுகப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்படும் ஒரு சட்டம் பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர முனைப்பு காட்டி வருகிறது. 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் வியூகத்தை முறியடிக்க பொது சிவில் சட்டத்தை பாஜக பயன்படுத்த தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


இப்படியான நிலையில், சில தினங்களுக்கு முன் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி பொது சிவில் சட்டம் பற்றி பேசினார். அப்போது, மத்திய சட்ட ஆணையம் அறிவித்தப்படி நாட்டு மக்கள் ஜூன் 14 ஆம் தேதி முதல் இச்சட்டம் பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர். 


பொது சிவில் சட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் திமுக தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பேசிய திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவோம் என்று கூறி இருப்பதன் மூலம் இஸ்லாமியர்கள் மத்தியில் நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் நோக்கமாக உள்ளது’ என குற்றம் சாட்டினார். 


இதற்கிடையில் தமிழ்நாட்டில் கூட்டணியில் இருந்த போதும் அதிமுக தரப்பிலும் பொதுசிவில் சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க தயங்குவதாகவே தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தில் எவ்வித திருத்தங்களையும் கொண்டு வர வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் நாட்டில் சிறுபான்மையினரின் மதம், மனித உரிமைகள் பறிக்கும் வகையில் திருத்தம் வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.