திருச்சியில் நடந்த மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவிற்கு ஆதரவாக பேசிய நிலையில் இவர்கள் ஒருவேளை கூட்டணி சேர்ந்தால் அரசியலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சராக்கிய சசிகலா:
முப்பெரும் விழா திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் பேசிய ஓபிஎஸ், தன்னை இரண்டு முறை முதலமைச்சர் ஆக்கியவர் ஜெயலலிதா என்றும், மூன்றாம் முறை முதலமைச்சராக்கியவர் சசிகலா என்றும் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கியவர் சசிகலா என்றும் கூறினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அவரை பார்த்து எதையோ பார்த்து நாய் குரைக்கிறது என்று கூறினால் அவரை வரலாறு மன்னிக்காது என்று தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், தேவைப்பட்டால் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் உடன் இணைந்து செயல்படுவேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் திருச்சியில் நேற்று முன்தினம் நடந்த மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவிப்பது போல அவரை சின்னம்மா என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். இது ஓபிஎஸ் ஏற்கனவே கூறியதை போன்று டிடிவி தினகரன் மற்றும் சசிகலா உடன் கூட்டணி அமைக்க உள்ளாரா? என்ற கேள்வியை மேலும் வலுவாக்கியுள்ளது.
ஓபிஎஸ்- சசிகலா கூட்டணி ?
தற்போது உள்ள சூழலில் ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து செயல்படுவது சாத்தியமா? என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஒருவேளை ஓபிஎஸ் இவர்களுடன் இணைந்து செயல்பட்டாலும் அது அரசியலில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்று தான் அரசியல் நிபுணர்களும், வல்லுனர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். இவர்களிடம் அதிமுக கட்சியும், சின்னமும் இல்லாதது தான் இதற்கு மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
சமூக வாக்கு வங்கி ஓபிஎஸ்-க்கு உள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த வாக்குகளையும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பிரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். டிடிவி தினகரனை சில மீடியாக்கள் மிஸ்டர் கூல் என்றெல்லம் வர்ணித்தற்கு காரணம், அவர் எப்படிப்பட்ட கேள்வியாகினும் அதை சிரித்துக் கொண்டே மிக ஈசியாக எதிர்கொள்வதுதான். ஆனாலும், மக்கள் மத்தியில் டிடிவிக்கு பெரிய அளவிலான வாக்கு வங்கி இல்லை என்பதை தான் முந்தையை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
அங்கீகாரம் பெற்ற எடப்பாடி:
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்வதற்கு முன், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கி விட்டு சென்றார் சசிகலா. ஓபிஎஸ்- ஈபிஎஸ் இருவரும் இணைந்து கட்சியை வழி நடத்திய நிலையில் ஒரு கட்டத்தில் கட்சியை தன் வசம் கொண்டு வருவதற்கான அனைத்து பணிகளையும் இபிஎஸ் செய்து முடித்தார்.
அதிமுக நிர்வாகிகள் மிக ஒரு சிலரை தவிர மற்ற அனைவருமே தற்போது இபிஎஸ் உடன் இணக்கமாக செயல்படுகின்றனர். இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை டெல்லியில் சந்திக்க உள்ளார்.
அப்போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி அமைத்து செயல்படுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இபிஎஸ் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுடன் இணக்கமாக செல்வது அவருக்கு சாதகமான ஒன்றாகவும் கருதப்படுகிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் சசிகலா ஆகியோர் இணைந்து செயல்பட்டாலும், அது தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது தற்போதைய சூழலில் கேள்விக்குறியாகவே உள்ளது.