சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓ. பன்னீர் செல்வத்தை மாற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர், “ ஏற்கனவே பலமுறை முறையிட்டு எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. நிலுவையில் உள்ள வழக்குகளும் முடிந்த நிலையில் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ. பன்னீர் செல்வத்தை மாற்றவில்லை. காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரக்கூடிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்கின்ற இருக்கை, மரபு என்ற அடிப்படையில் அந்த இருக்கையை பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு  வழங்கியுள்ள உதயகுமாருக்கு வழங்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் பேசுவது நேரலை செய்யப்படுவதில்லை.” என தெரிவித்தார். 


ஓபிஎஸ் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறி அரசினர் தீர்மானத்திற்கு முன் கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். 


அப்போது அரசினர் தீர்மானம் உள்ளதால் கவன ஈர்ப்பு தீர்மானம் நாளை எடுத்து கொள்ளப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அப்போது அவர், நீண்ட விளக்கம் ஏற்கனவே இந்த அவையில் கொடுத்துள்ளேன். எங்களுக்கு எதிராக சொல்லக் கூடிய கருத்துக்களை மறுப்பு தெரிவிக்க அனுமதிக்க வில்லை என்று ஒரு கருத்தை கொறடா வேலுமணி நேற்று முன் தினம் கூறியிருந்தார். உறுப்பினர் தங்கமணி பேசும்பொழுது குறுக்கீடு செய்திருக்கலாம்,  ஆனால் அன்றைய தினம் குறுக்கீடே செய்யப்படவில்லை. நீங்கள் பேசினால் பரவாயில்லை, நீங்கள் இன்னொரு உறுப்பினரை பேச சொல்கிறீர்கள். இது மரபு இல்லை .உங்கள் கருத்தை பதிவு செய்ய கூடாது என நானோ, முதல்வரோ,  சபையோ விரும்பவில்லை” என்றார். 


இதனால் எதிர்க்கட்சி  துணைத்தலைவர் விவகாரத்தில் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 


முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தனி தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்ய இருந்தார், தமிழ்நாடு ஆளுநருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு, குடியரசு தலைவர் வலியுறுத்தி தமிழ்நாடு அரசு தனித்தீர்மானம் கொண்டு வர இருந்தது. 


இதையடுத்து, சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் தனித்தீர்மானம் தாக்கல் செய்யப்பட இருந்தது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியிலிருந்து ஓ. பன்னீர் செல்வத்தை நீக்கக்கோரி அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். கவன ஈர்ப்பு தீர்மானத்தை முதலில் நிறைவேற்ற வேடும் என சபாநாயகரிடம் அதிமுக எம்.எல்.ஏக்கள் முறையிட்டனர்.