AIADMK Madurai Meeting: மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டில் மோசமான உணவு வழங்கப்பட்டதால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர்.


அதிமுக மாநாடு:


மதுரை விமான நிலையம் அருகே அதிமுகவின் பொன்விழா மாநாடு எழுச்சி மாநாடாக நடத்தப்பட்டு வருகிறது.  தமிழகமே திரும்பிப் பார்க்கும் வகையில் இந்த மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்த திட்டம் தீட்டி கடந்த ஒரு மாதமாக தீவிரமாக உழைத்து மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளனர். இன்று காலை துவங்கிய மாநாட்டு நிகழ்வு  மாலை வரை நடைபெறுகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளதால் அப்பகுதியே விழக்கோலம் பூண்டுள்ளது.


ஹெலிகாப்டரில் தூவப்பட்ட பூக்கள்:


காலையில் விழாவை தொடக்கி வைக்க வந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, கட்சியின் 51வது ஆண்டு விழாவையொட்டி, 51 அடி உயர கம்பத்தில் கட்சியின் கொடியை ஈபிஎஸ் ஏற்றினார். அப்போது, ஹெலிகாப்டர் மூலம் 1 டன் எடையிலான பூக்கள் அங்கு தூவப்பட்டன. தொடர்ந்து, மாநாடு நடைபெற்று வருகிறது.


உணவு ஏற்பாடுகள் தீவிரம்:


இதனிடையே, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அழைத்து வரப்பட்டுள்ள தொண்டர்களுக்கு,  காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 3 வேளை சிறப்பான உணவு வழங்கப்படும் என அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக செல்லூர் ராஜூ மாநாட்டில் கொடுக்கப்படும் உணவுகள்,  வகை வகையாக இல்லாவிட்டாலும் சுவையாக இருக்கும். மக்கள் வியந்து போகும், அளவிற்கு சாப்பாடு சுவையாக இருக்கும்  என்றார். இந்த உணவு தயாரிக்கும் பணிகள் நேற்று இரவு முதலே தொடங்கி மும்முரமாக நடைபெற்று வந்தது.


மோசமான உணவு - தொண்டர்கள் அதிருப்தி:


நூறுக்கும் அதிகமான ஸ்டால்கள் அமைக்கப்பட்டு பஃபே முறையில் தொண்டர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநாட்டில் கொடுக்கப்பட்ட உணவு உப்பு சப்பில்லாத சாம்பார் சாதமாகவும், பச்ச வாசனை வீசும் புளியோதரையாகவும் உள்ளது. இதனால் அதிமுக தொண்டர்கள் ஆழ்ந்த பசியிலும் உண்ண முடியாமல் உணவுகளை கீழே கொட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.  ஹெலிஹாப்டரில் பூவெல்லாம் கொட்டியது எல்லாம் நன்றாக தான் இருந்தது. ஆனால் உங்களை நம்பி வந்த தொண்டர்களுக்கு தரமான உணவை கொடுக்காமல் ஏமாற்றி விட்டீர்களே என்று அங்கிருந்த தொண்டர்கள் பலரும் வேதனை தெரிவித்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.