Edappadi Palanisamy: தமிழகத்தில் திமுக-பாஜக இடையே தான் போட்டி என அண்ணாமலை கூறிய நிலையில், எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
"திமுக அரசு சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது”
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "திமுக அரசு வீட்டுவரி உள்ளிட்ட பல வரிகளுக்கு பாக்கி வைத்திருந்தால் அதற்கு வட்டி வசூலிக்கிற அரசாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளின் படி இடைநிலை ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் சட்டம் ,ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. அரசின் தலைமை சரியில்லை. சர்வதிகார போக்குடன் திமுக செயல்படுகிறது. தலைமை சரியாக இருந்திருந்தால் பிரச்னை ஏற்பட்டிருக்காது. ஒட்டுமொத்த திமுக அரசே குளறுபடியாகத்தான் உள்ளது. பிரச்னைகளை சமூக வலைதளங்களில் எடுத்துச் சொன்னால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை” என்றார்.
"அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி”
தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி. யார் எதிர்க்கட்சி என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொல்வது அவரது கருத்து. ஆனால், வேண்டுமென்றே திட்டமிட்டு இதுபோன்ற கருத்துகளை கூறி வருகிறார் அண்ணாமலை. யாருக்கு யார் போட்டி என்பது மக்களவைத் தேர்தலின்போது தெரியும். எத்தனை முறை சொல்வது. பாஜகவுடனான கூட்டணி முறிந்துவிட்டது என்பதில் அதிமுக தெளிவாக உள்ளது. தேசிய கட்சிகள் கூட மாநில பிரச்சனைகளை வைத்தே அரசியல் செய்கின்றன.
மத்தியில் யார் ஆட்சி அமைந்தாலும் மக்கள் பிரச்னைகளை பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம். தமிழ்நாட்டு மக்களுடைய உரிமைகளை பாதுகாக்க தான் தனித்து போட்டியிடுகின்றேன். தமிழக மக்களின் உரிமைகளை காப்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்னைகள் குறித்து அதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும். பல மாநிலங்களில் பிரதமர் வேட்பாளரை முன்வைக்காமலேயே தேர்தலை சந்திக்கின்றனர். டிடிவி தினகரின் கட்சியை நாங்கள் பொருட்படுத்துவதே இல்லை. அதைக் கட்சியாகவே பார்ப்பதில்லை. டிடிவி தினகரின் கட்சி இந்த தேர்தலுடன் முகவரி தெரியாமல் போய்விடும்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை கூறியது என்ன?
சென்னை அமைந்தகரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "கூட்டணியில் இருந்து போனவர்களை நினைத்து வருத்தமும் இல்லை. மகிழ்ச்சியும் இல்லை. பாஜகவை எப்படி வழிநடத்த வேண்டும் என்ற பாதையில் நான் தெளிவாக இருக்கிறேன். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 2024ஆம் மக்களவைத் தேர்தலில் திமுக-பாஜக இடையேயான போட்டியாக தான் இருக்கும். திமுக-பாஜக இடையேயதான் போட்டி என்பதை மீண்டும் சொல்கிறேன். யாரை எதிர்த்துத் போட்டியிடுகிறோம் என்பதில் தமிழக பாஜக தெளிவாக உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.