போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்க நிர்வாகி அறிவித்துள்ளார். இதன் பின்னணியில் அரசு மிரட்டல் எதுவும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். 


ஒரு வாரத்துக்கும் மேலாக ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டன. பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் இந்தப் போராட்டம் நடைபெற்று வந்தது. இதை அடுத்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குநர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 


இதைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு, இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மூவர் அடங்கிய குழு உள்ளிட்ட சில அறிவிப்புகளை வெளியிட்டார். 


 அறிவிப்பில் திருப்தி இல்லை


எனினும் அரசின் அறிவிப்பில் திருப்தி இல்லை என்றுகூறி அனைத்து ஆசிரியர் சங்கங்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டன. 


தொடர்ந்து நேற்று அதிகாலை, ஆசிரியர்களைக் காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்டு, எழும்பூர், புதுப்பேட்டை சமுதாய நலக் கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


அதைத் தொடர்ந்து பகுதி நேர ஆசிரியர் சங்கமும் டெட் ஆசிரியர் சங்கமும் போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்றன. எனினும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கம் சம வேலைக்கு சம ஊதியம் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது. 


இதைத் தொடர்ந்து நேற்று இரவு அனைவரும் டிபிஐ வளாகத்தில் குவிந்தனர். அவர்களைக் காவல்துறை கைது செய்தது. ஆசிரியர்கள் பேருந்தில் அமர வைக்கப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கத்தை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இன்று நண்பகல் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.


இந்நிலையில், சென்னையில் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் சங்க நிர்வாகி செய்தியாளர்களிடம் கூறியதாவது:


''சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையைப் பரிசீலிப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார். மாநிலப் பொதுச் செயலாளர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால் நாங்கள் வந்துள்ளோம். 3 மாத காலத்துக்குள் அரசு எங்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து, நிறைவேற்றும் என்று நம்புகிறோம். 


எங்களை அரசு அச்சுறுத்தவும் இல்லை. மிரட்டவும் இல்லை. பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் அமைச்சர் ஆகிய இருவரும் முதலமைச்சரின் உத்தரவாதத்தை எங்களிடம் தெரிவித்தனர். இதையும் ஆசிரியர்களின் உடல் நலன் மற்றும் குழந்தைகளைக் கருத்தில் கொண்டும் போராட்டத்தைத் திரும்பப் பெறுகிறோம். இதுவரை எங்களுடன், எங்களுக்காகப் பயணித்த ஆசிரியர்களுக்கும் இயக்கங்களுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி''. 


இவ்வாறு இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்க நிர்வாகி தெரிவித்தார்.