மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர்தூவி எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து இன்று காலை 9.30 மணியளவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்கிறார். தொடர்ந்து, அதிமுகவின் கட்சி கொடியை ஏற்றி வைத்து அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், ‘நமது அம்மா’ நாளிதழ் சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா சிறப்பு மலரையும் வெளியிட இருக்கிறார்.
மேலும் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டு அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் காவல் தெய்வம்; ஏழை, எளிய மக்களின் விடிவெள்ளி; மாற்றாரும் போற்றிப் பாராட்டும் சிங்கநிகர்த் தலைவி; மக்கள் அனைவராலும் பாசத்தோடு “அம்மா” என்று அழைக்கப்படும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அவர்களின் 75-ஆவது பிறந்த நாளில், அவரைப் பற்றிய இனிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளவும்; அவர் காட்டிய வெற்றிப் பாதையில் தொடர்ந்து நடைபோட உறுதி ஏற்கவும் இந்த மடல் வழியாக, கழக உடன்பிறப்புகளாகிய உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்"
என்ற குறளுக்கேற்ப, வாழும் காலத்திலேயே தமிழ் நாட்டு மக்களின் உள்ளங்களில் எல்லாம் இதய தெய்வமாக வீற்றிருந்த புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இறை நிலையோடு கலந்துவிட்ட நிலையிலும், நம்மையெல்லாம் வழிநடத்தும் ஆற்றல் மிகு சக்தியாக இருக்கிறார். அவருடைய பிறந்த நாளினை நாம் நினைவு கூர்ந்து கொண்டாடுகின்ற இந்த வேளையில், தன்னிகரில்லாத் தலைவியாக, இந்திய அரசியல் வானில் வீறுநடை போட்ட புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கடந்து வந்த சோதனைகளையும், நிகழ்த்திக் காட்டிய இமாலய சாதனைகளையும் நினைவு கூர்வதும், இளம் தலைமுறைக்கு அவற்றை கொண்டுபோய்ச் சேர்ப்பதும் நமது தலையாய கடமையாகும்.
அரசியல் களத்தில் தீய சக்திகளை வீழ்த்தும் பணியில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் எதிர்கொண்ட சோதனைகள் சாதாரணமானவை அல்ல. புரட்சித் தலைவரின் மறைவிற்குப் பிறகு அவர் கட்டியெழுப்பிய மாபெரும் மக்கள் இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்தி அழித்துவிட ஒருபக்கம் எதிரிகளும், இன்னொரு பக்கம் துரோகிகளும் இழி செயல்கள் செய்த நேரத்தில், அறம் என்னும் வாளேந்தி களமாடி நம் உயிர் நிகர் கழகத்தையும், தமிழ் நாட்டு மக்களையும் காத்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.
சட்டமன்றத்திற்குள்ளாகவே புரட்சித் தலைவி அம்மா அவர்களை அவமானப்படுத்தி, அவரை அச்சுறுத்தி அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்திவிட நினைத்தார்கள் தீய சக்திகள். “எந்த சட்டமன்றத்தில் இந்த ஆதிக்க கும்பலால் அவமானப்படுத்தப் பட்டேனோ அந்த சட்டமன்றத்தில் இனி நுழைந்தால் முதலமைச்சராகத்தான் நுழைவேன்” என்று பிடரி சிலிர்த்த சிங்கத்தைப் போல சபதமேற்று, அங்கிருந்து வெளியேறிய புரட்சித் தலைவி அம்மா அவர்கள், கோடான கோடி தமிழ் நாட்டு மக்களின் பேராதரவோடு முதலமைச்சராகவே சட்டமன்றத்திற்குள் நுழைந்த, அந்த மெய்சிலிர்க்கும் தருணங்களை வரலாறு ஒருபோதும் மறக்காது.
புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் மக்கள் நலனை முன்னிறுத்தி செயல்படுத்திய பல்வேறு முத்தான திட்டங்களில் ஒருசிலவற்றை இங்கே நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.
தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், புரட்சித் தலைவருக்குப் பிறகு, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி வாகை சூடி சாதனை படைத்தது;
இந்தியாவிலேயே ஒரு மாநிலக் கட்சி, அகில இந்திய அளவில் நாடாளுமன்றத்தில் மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக உருவெடுக்கும் அளவுக்கு வென்று காட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வரலாற்றுச் சாதனையை பெற்றுத் தந்தது;
தமிழ் நாட்டிற்கான காவேரி நீர் பங்கீடு குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பினை, நீதிமன்றம் மூலமாக மத்திய அரசிதழில் வெளியிட தொடர்ந்து போராடி வெற்றி கண்டு, காவேரி டெல்டா மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழி ஏற்படுத்தியது; முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர்
* ஏழை மக்களின் வாழ்வில் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவர விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, அரிசி முதலானவற்றை வழங்கியதோடு, மின்வெட்டால் சீரழிந்திருந்த தமிழ் நாட்டை மீட்டெடுத்து, வீட்டுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கியது;
இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவும் வியந்து பாராட்டிய தொட்டில் குழந்தை திட்டம், அம்மா உணவகம், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தாலிக்குத் தங்கம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கான மடிக் கணினி, மிதிவண்டி, கல்வி உபகரணங்கள், சீருடை உள்ளிட்ட நலத் திட்டங்கள் வழங்கியது” என தெரிவித்திருந்தார்.