கள்ளக்குறிச்சி நிகழ்வு மற்றும் சட்டபேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் இன்று உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர். 


தமிழகத்தை கடந்த ஜூன் 18, 19 ஆம் தேதிகளில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் காலனி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததாக 200க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 60க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தாலும், எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன. 


இப்படியான நிலையில் மானியக் கோரிக்கை விவாதம் தொடர்பாக தமிழக சட்டபேரவை ஜூன் 20 ஆம் தேதி கூடியது. அன்று முதல்  அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக கருப்புச்சட்டை அணிந்து அவை நிகழ்வுகளில் பங்கேற்று வந்தனர். மேலும் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் இந்த விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை காவலர்களால் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். 


தொடர்ந்து நேற்று முன்தினம் ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால் தினமும் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேசக்கோரி கோரிக்கை விடுத்து அமளியில் ஈடுபட்டு வந்ததால் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தொடர் முழுக்க சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் இன்று அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர். 


சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடந்து வரும் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்கிறார். காலை 9 மணிக்கு தொடங்கியுள்ள இந்த உண்ணாவிரதம் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வுக்கு 23 நிபந்தனைகளுடன் காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். அமைதியான முறையில் உண்ணாவிரதம், பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமை, அரசு அதிகாரிகள், தனிப்பட்ட நபர்களை தாக்கி பேசுதல், முழக்கமிடுதல் கூடாது என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.