மாநிலங்களவை தேர்தலுக்கான 2 வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அதிமுகவில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்தநிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி கூட்டாக இணைந்து மாநிலங்களவை தேர்தலுக்கான 2 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் 10.6.2022 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது சம்பந்தமாக 19.5.2022 அன்று தலைமைக் கழகத்தில் நடைபெற்ற கழக மூத்த நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளை, கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலனை செய்து எடுத்த முடிவின்படி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
1. திரு.C.Ve. சண்முகம், B.A., B.L., அவர்கள் கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர் விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
2. திரு. R. தர்மர், B.A., அவர்கள் முதுகுளத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ராமநாதபுரம் மாவட்டக் கழக முன்னாள் செயலாளர்.
யார் இந்த தர்மர்..?
ஓ.பி எஸ்ஸின் தீவிர விசுவாசி, முன்னாள் மாவட்ட கழக செயலாளர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட தர்மருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அவருக்கு பதில் கீர்த்திகா முனியசாமி போட்டியிட்டார். அதன் காரணமாக தற்போது தர்மருக்கு அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலுக்கான அறிவிக்கப்பட்ட 2 வேட்பாளர்கள் பட்டியலில் ஒரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தென் மாவட்டத்திலிருந்து அறிவிக்கப்பட்டுள்ள தர்மர் அதிமுகவின் நீண்ட கால உறுப்பினராக இருந்து வருகிறார். முன்னாள் மாவட்ட செயலாளராக பொறுப்பில் இருந்தவர். இந்த மாநிலங்களவை பதவிக்கு அவர் விருப்ப மனுவோ விருப்பத்தையும் அவர் தெரிவிக்கவில்லை இருப்பினும் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் வரும் ஜூன் 10ஆம் தேதி மாநிலங்கள் அவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாகும் 6 இடங்கள் உட்பட 57 இடங்களுக்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், அதிமுகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீதிகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூன் 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
சட்டப்பேரவையில் இருக்கும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அடிப்படையில், திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்