செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடந்து வருவது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த இரண்டு ஆண்டுகால விடியா தி.மு.க ஆட்சியில் முதலமைச்சரின் மகனும், மருமகனும் 30,000 கோடி ரூபாயை என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பதாக அமைச்சர் P.T.R. பழனிவேல் தியாகராஜன் அவர்கள் உரையாடிய டேப் லீக் ஆனதாக அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.


அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்து வரும் துறையில் ஒன்றான டாஸ்மாக் நிறுவனத்தில் உள்ள சுமார் 4000-த்திற்கும் மேற்பட்ட பார்களின் லைசென்ஸ்கள் புதுப்பிக்கப்படாமல், சட்டத்திற்குப் புறம்பாக அவரது கரூர் கம்பெனியால் நடத்தப்படுவதாக அனைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனால், தமிழக அரசுக்கு கோடிக்கணக்கான வரி இழப்பு ஏற்படுகிறது. மேலும், இந்த சட்டவிரோத பார்கள் மூலம் கலால் வரி செலுத்தப்படாமல் மதுபான உற்பத்தி ஆலைகளில் இருந்து நேரடியாக மதுபானங்கள் விற்கப்படுகின்றன. இதனால் அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படுவதாக, அப்போதைய நிதியமைச்சர் பேட்டி அளித்திருந்தார்.


மேலும், டாஸ்மாக் கடைகளில் பாட்டில் ஒன்றுக்கு 10/- ரூபாய் வீதம் கூடுதலாக வசூலித்துத் தரவேண்டும் என்று, தாங்கள் கரூர் கம்பெனியைச் சேர்ந்தவர்களால் வற்புறுத்தப்படுவதாக டாஸ்மாக் ஊழியர்களே குற்றஞ்சாட்டி பேட்டி அளித்துள்ளனர். இதன் மூலம், பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெறுகிறது என்று நாளிதழ்களும், ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டுள்ளன.


செந்தில்பாலாஜி, வருமான வரித்துறை அதிகாரிகள் சுவர் ஏறி குதித்ததாகக் கூறியுள்ளார். இதே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் மீது பொய்யான புகார்கள் புனைந்து தமிழக காவல் துறையால் சோதனைகள் செய்ததையும், அப்போது, கழக தலைமை நிலையச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான S.P. வேலுமணி, M.LA., அவர்களுடைய வீட்டில் சுவர் ஏறி குதித்த தமிழக காவல் துறை நடவடிக்கையை ரசித்தவர்கள்தானே விடியா திமுக ஆட்சியாளர்கள்.


முறையாக வருமான வரி கட்டவில்லை என்றும்; வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் வந்த செய்திகளின் அடிப்படையில் விசாரிக்க முறையாக வந்த மத்திய வருமான வரித்துறை அதிகாரிகளை கரூரில் தி.மு.க. குண்டர்கள் அடித்து விரட்டி இருக்கிறார்கள். வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டுள்ளன. தாக்குதலுக்குள்ளான வருமான வரித்துறை பெண் அதிகாரி உட்பட 4 பேர், கரூர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பது, நம் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கு உதாரனமாகும். மாநில அரசு அதிகாரிகளும் திமுக குண்டர்களால் தாக்கப்படுகின்றனர். இப்போது மத்திய அரசு அதிகாரிகளும் தாக்கப்பட்டுள்ளனர். இது குறித்துப் பேட்டியளித்த கரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், எங்களிடம் சொல்லாமல் சோதனைக்கு வந்துவிட்டனர் என்று கூறுகின்றனர். நடந்த அனைத்தையும் ஊடகங்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளன.


ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வக்காலத்து வாங்கி, தன்னை அதிமேதாவி என்று காட்டிக்கொள்ளும் ஆலந்தூர் பாரதி அவர்கள் திருடர்களும், கொள்ளையர்களும் இரவில்தான் வீடு புகுவார்கள்; அதுபோல் வருமான வரித்துறையினர் இரவில் புகுந்ததாசு சொல்கிறார். ஆலந்தூர் பாரதி தமிழ் நாட்டில் திருடர்களும், கொள்ளையர்களும் இரவில் சுதந்திரமாக உலா வருகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறாரா?


மேலும், முதலமைச்சர் வெளிநாடு சென்றுள்ளபோது, வருமான வரி சோதனை நடத்துவது சரியல்ல என்றும் கூறியுள்ளார். முதலமைச்சருக்கும், வருமான வரித்துறைக்கும் என்ன சம்பந்தம்? 2006-2011 காலக்கட்டத்தில், மத்தியில் ஆண்ட காங்கிரஸ்-திமுக கூட்டணியின்போது, கலைஞர் டி.வி-யில் மத்திய புலனாய்வுத் துறை சோதனை நடத்தவில்லையா? அதை, அப்போதைய தமிழக ஆளும் கட்சியான மைனாரிட்டி திமுக அரசு, மடியில் கனமிருந்தால், வழியில் பயந்துதான் ஆக வேண்டும் என்ன சொன்னது ?


மேலும், கரூர் காவல் துறை கண்காணிப்பாளர், வருமான வரித்துறையினர் முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு வந்திருந்தால் தக்க பாதுகாப்பு அளித்திருப்போம் என்று கூறுகிறார். ஒரு அகில இந்திய காவல் பணி அதிகாரி எப்படி இவ்வாறு பொது வெளியில் பேட்டி அளிக்கிறார் என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. காவல் துறை திருடர்களை பிடிக்கப் போகும்போது இப்படித்தான் தகவல்களை முன்கூட்டியே தெரிவித்துவிட்டு, அவரது காவல்துறை செயல்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.


வருமான வரித்துறை அதிகாரிகள் முன்கூட்டியே தகவல் தெரிவித்து வந்திருந்தால், முக்கிய நபர்கள் அவர்களது வீட்டில் உள்ள முக்கிய ஆவணங்களையும், பல கோடி பணத்தையும் பதுக்கி இருக்கலாம்; அது முடியாமல் போய்விட்டதே என்ற ஆற்றாமையும், ஆதங்கமும் ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல காவல்துறை அதிகாரிகளுக்கும் இருப்பது போல் பேட்டி அளித்திருப்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தான் ஒரு அதிகாரி என்பதை மறந்துவிட்டு தி.மு.க. உறுப்பினர் போல் செயல்படுவது கண்டிக்கத் தக்கதாகும்.


மேலும், ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்த போது, மாநிலத்தில் பல இடங்களில் வருமான வரித்துறையினர், ஒப்பந்ததாரர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரிச் சோதனை நடத்தினார்கள். அந்த சமயங்களில் ஸ்டாலின் அந்த சோதனைகளோடு, எங்களை தொடர்புபடுத்திப் பேசி பத்திரிக்கைகளில் அறிக்கை வெளியிட்டார்.


ஆனால் இப்போது, கடந்த இரண்டு நாட்களாக செந்தில்பாலாஜி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வீடுகள், அலுவலகங்கள் என்று பல சோதனை நடந்து வருகிறது. தமிழகத்தில் எந்த தனியார் ஒப்பந்ததாரர்கள் இடத்தில் சோதனை நடந்தாலும், அதில் எங்களை சம்பந்தப்படுத்தி அறிக்கை விடும். முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? தற்போது ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் வீடுகளில் வருமான வரிச் சோதனை நடத்தப்படும்போது இதை கண்டிக்கின்றனர். 


ஆளும் கட்சியினர் முன் கைகட்டி நின்று சேவகம் செய்யும் ஒருசில தமிழக காவல் துறை அதிகாரிகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். டெல்லி அரசில் நடைபெற்ற மதுபானக் கொள்கை ஊழலை விட பலநூறு மடங்கு ஊழல் தமிழகத்தில் இந்த விடியா தி.மு.க. ஆட்சியில் நடந்துள்ளது. சோதனையோடு நின்றுவிடாமல் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் தவறு இழைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.” என குறிப்பிட்டு இருந்தார்.