EPS On Sasikala: பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் தப்பில்லையே என, சசிகலா காலில் விழுந்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

Continues below advertisement

எடப்பாடி பழனிசாமி விளக்கம்:

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சரவணனுக்காக மதுரை கே.கே.நகரில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் பணிமனை அலுவலகத்தை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.  நிகழ்வில் அதிமுக வேட்பாளர்  சரவணன் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு ஆர்.பி.உதயகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்,  அப்போது செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடியிடன்ம், சசிகலா காலில் விழுந்தது தொடர்பான அமைச்சர் உதயநிதியின் விமர்சனம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு, “நான் பெரியவர்களிடம் ஆசி வாங்குவது தவறா? வேறு யாரிடமோ மூன்றாவது நபரிடமோ ஆசி வாங்கவில்லையே” என எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். 

”தமிழ்நாட்டில் ஒரே அலை தான்”

தொடர்ந்து பேசுகையில், “நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணி ஏற்பட்டதை அடுத்து நிர்வாகிகள் தொண்டர்கள் எழுச்சியோடு செயல்பட்டு வருகிறார்கள், அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது, நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும், தமிழகத்தில் ஒரே அலை தான் வீசுகிறது, அது அதிமுக அலையாக வீசுகிறது, அதிமுக என்னென்ன சாதனைகள் செய்தோம் இனி என்ன சாதனைகள் செய்யப் போகிறோம் என மக்களிடம் கூறுவதால் மக்கள் அதிமுக கூட்டணியை விரும்புகிறார்கள்.

Continues below advertisement

முதலமைச்சருக்கு பதிலடி:

அதிமுக கள்ளக்கூட்டணி வைத்துள்ளது என முதலமைச்சர் விமர்சனம் செய்வதற்கு அவரே விளக்கம் அளிக்க வேண்டும். இப்படி எல்லாம் யாரும் விமர்சனம் செய்ததே இல்லை, ஒவ்வொரு தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைக்கப்படுகிறது. பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக மீது அவதூறு பரப்பி வருகிறது. தோல்வி பயத்தின் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அதிமுகவை அவதூறாக பேசி வருகிறார்கள்.

கேள்வி கேட்போம்”

பாஜகவுடன் கூட்டணியில் இருந்தோம், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற பின்பு எதை பேசுவது. திமுக மாதிரி நாங்கள் அல்ல அதிமுக கூட்டணி தர்மத்தை கடைப்பிடிப்போம். கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டதால் பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம், கூட்டணியில்  இருக்கும் போது கட்சியினரை விமர்சனம் செய்யக்கூடாது, அப்படி விமர்சனம் செய்தால் உள்ளடி வேலை செய்வதாக அர்த்தம்.  கூட்டணி கட்சிகளை விமர்சனம் செய்வது திமுகவிற்கு கைவந்த கலை. கூட்டணி கட்சியினருக்கு அதிமுக என்றுமே விசுவாசமாக இருக்கும். தமிழ்நாட்டு மக்களுக்கு பாதிப்பு வருகின்ற திட்டங்களை கடுமையாக எதிர்ப்போம், தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், யார் தோல்வி அடைவார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். அதிமுகவிற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் மக்களிடம் அபரிவிதமான செல்வாக்கு உள்ளது” என எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.