தமிழகத்தில் கடந்த ஒருவார காலமாக தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிகழ்வு அதிமுக ஒற்றை தலைமை விவகாரம். கடந்த வாரம் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்றும். ஒற்றை தலைமை இல்லாததே தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில். கட்சி யாருடைய தலைமையில் இயங்கும் என்பது குறித்து இபிஎஸ் - ஒபிஎஸ் இடையே கடுமை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற ஒபிஎஸ் இபிஎஸ் இருவரும் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று சென்னையில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலர் கடுமையான கண்டணங்களை தெரிவித்தனர். மேலும் ஓ.பி.எஸ் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். அப்போது அவர் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டும், கண்டித்தும் கோஷங்கள் எழுப்பட்டது.
இதனை தொடர்ந்து அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஜூலை 11-ஆம் தேதி நிச்சயமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவார் எனவும் கூறினார். இதனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பொதுக்குழு முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் தற்காலிக அவைத் தலைவரான தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
மேலும் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் சர்வதிகாரம் என ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் தெரிவித்தார். இந்த நிலையில் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று டெல்லிக்கு புறப்பட்டார்.
டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ் கூறுகையில்... நாளை பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் வேட்புமனுவை தாக்கல் செய்யும் நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்பேரில் நான் டெல்லி செல்கிறேன் என்றார். அ.தி.மு.க. பொதுக்குழுவில் பல்வேறு சர்ச்சைகள் வெடித்து அடுத்த பொதுக்குழு வரும் ஜூலை 11-ந் தேதி கூட உள்ள நிலையில், டெல்லியில் அமைந்துள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இதில் வரும் ஜூலை 11-ந் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக இந்த மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார். தன்னுடைய கையெழுத்து இல்லாமல் பொதுக்குழு கூட்டம் கூட்ட முடியாது என அறிவிக்க வலியுறுத்தி முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் கே.பி அன்பழகன், கே.சி வீரமணி, கடம்பூர் ராஜூ, தங்க மண,சிவி சண்முகம் மற்றும் வைகை செல்வன், வளர்மதி ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். பின்பு அதிமுக வைகை செல்வன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்.. அவை தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தது போல வரும் 11 ஆம் தேதி கண்டிப்பாக பொது குழு கூட்டம் நடைபெறும், அதில் ஒற்றை தலைமை குறித்த முடிவு எடுக்கப்படும் என்றார். மேலும் ஒ. பன்னிர்செல்வத்தின் டெல்லி பயணம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அது குறித்து கேள்வி தற்போது பதில் கூற இயலாது என கூறி சென்றார்.