ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறையிம் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்து இருந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து தமிழ்நாடு போலீஸ் இவரை கைது செய்யும் முனைப்பில் தேடுதல் வேட்டையை தொடங்கியது. ஆனால் ராஜேந்திர பாலாஜி இருக்கும் இடம் தெரியவில்லை.




ராஜேந்திர பாலாஜியின் அக்கா மகன்கள், கார் ட்ரைவர் ஆகியோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் தலைமறைவாக உள்ள அவரைப் பிடிப்பதற்காக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கணேஷ் தாஸ் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 


மதுரை, சென்னை என தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  தமிழ்நாடு மட்டுமின்றி  தனிப்படை போலீசார் மற்ற மாநிலங்களையும் சல்லடை போட்டனர். குறிப்பாக பெங்களூருவில் ராஜேந்திர பாலாஜி இருக்கலாம் என தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டது.


மாறு வேடத்தில், தமிழகம் மட்டுமின்றி கேரளா, பெங்களூரு என ஒவ்வொரு நாளும் இடத்தை மாற்றிக்கொண்டே இருப்பதாகத் தகவல்கள் போலீஸாருக்கு கிடைத்தது. காரை மாற்றி மாற்றி பயணம் செய்துகொண்டிருப்பதாகவும் போலீசார் கூறினர். 


இதற்கிடையே வெளிநாடு சென்றுவிடக் கூடும் என்பதால் 'லுக் அவுட் நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.  இதனால் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அதிரடியாக அவரது 6 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. இந்நிலையில் அவரது  சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதாக போலீசார் கூறினர். ஆனாலும் அவரின் ஆதரவாளர்கள், அதிமுகவின் முக்கிய பிரபலங்கள் உள்ளிட்ட்ட சுமார் 600 பேரின் செல்போன் எண்களை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். 




தற்போது பழைய மாடல் பட்டன் போன் ஒன்றில் ராஜேந்திர பாலாஜி புது சிம் போட்டு பயன்படுத்தி வருவதை போலீசார் கண்டுபிடித்துள்ளதாக கூறப்பட்டது. அதனை வைத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.அந்த வகையில், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய வட மாவட்ட ஆதரவாளர்களிடமும் அவர் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் வட மாவட்டங்களில் ராஜேந்திர பாலாஜி தங்கியிருக்கலாம் என சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்றது.


தீவிரமான தேடுதலுக்கு பிறகு கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் ராஜேந்திர பாலாஜியை தமிழ்நாடு போலீசார் கைது செய்தனர். காவி வேட்டி, டிசர்ட், மாஸ்க் என மிகவும் சாதாரணமாக காரில் இருந்தார் ராஜேந்திர பாலாஜி. காரில் சென்றுகொண்டிருந்த அவரை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர் காவல்துறை.  டிசம்பர் 17 முதல் கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியின் கண்ணாமூச்சி இன்று முடிவுக்கு வந்துள்ளது.