அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. கோவை மைல்கல் பகுதியில் உள்ள வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.
எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் வீடு உள்ளிட்ட கோவை மாவட்டத்தில் 41 இடங்களிலும், கோவை, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் வேலுமணி தொடர்புடைய நபர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: எஸ்.பி. வேலுமணி மீது 150 பக்க ஆவணங்களுடன் லஞ்ச ஒழிப்புத் துறையில் ஊழல் புகார்..!
மேலும், ரூ.58.23 கோடிக்கு கூடுதலாகவும், வருமானத்தை விட 3,928% கூடுதலாகவும் சொத்து சேர்த்ததாக எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் எப்.ஐ.ஆர். வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பது,
ஏ.1. ஆக குற்றம்சாட்டப்பட்டுள்ள எஸ்.பி.வேலுமணிக்கு டி.ஆர்.ஆர். சந்திரசேகர் மிகவும் நெருங்கியவர் என்பது தெரியவந்தது. இருவரும் இணைந்து நியாயம்றற டெண்டர்களை வழங்குவது உள்ளிட்ட குற்றவியல் சதியில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கண்ட கூற்றுகளின்படி எஸ்.பி.வேலுமணியின் சேமிப்பு மற்றும் செலவுகள் ஈட்டப்பட்ட வருமானத்திற்கு அதிகமாக உள்ளது. 27.4.2016 மற்றும் 15.3.2021 காலகட்டத்திற்கு இடையில் காசோலை மூலமாக ரூபாய் 33 லட்சத்து 70 ஆயிரத்து 16 ரூபாய் ஆகும். மேற்கூறிய காலகட்டத்திற்கு இடைவேளையில் எஸ்.பி.வேலுமணி அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும், மகன், மகள், உறவினர்கள் மற்றும் கூட்டாளிகள் ஆகியோரது பெயர்களில் சட்டவிரோதமாக ரூபாய் 58 கோடியே 23 லட்சத்து 97 ஆயிரத்து 52 ஆக உள்ளது. இது வருமானம் மற்றும் மொத்த வருமானத்தில் 3928 சதவீதமாக வந்துள்ளது.
எஸ்.பி.வேலுமணி தவறாக சம்பாதித்த பணத்தை பல்வேறு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளார். இதில், டி.ஆர்.ஆர். சந்திரசேகர், டி.ஆர்.கே. சந்திரபிரகாஷ் மற்றும் அவர்களது உறவினர்கள் பங்குதாரர்கள் அல்லது அந்த நிறுவன இயக்குனர்கள் அதிகவற்றை வாங்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் அதைச்சுற்றியுள்ள இடங்களிலும், வெளியிடங்களிலும் அதிக சொத்துக்களை அவரது உறவினர்கள் மற்றும் கூட்டாளிகள் பெயரில் பல்வேறு இடங்களில் வைத்துள்ளனர்.
அதேபோல, எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசனின் மனைவி ஹேமலதா ஸ்ரீமஹா கணபதி ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 99 சதவீத பங்குகளை வைத்துள்ளார். 2016-17 முதல் 2020-21 வரையிலான ரூபாய் 292 கோடி மற்றும் அதன் பொது நிறுவன காட்டிய விற்பனை அளவு அந்த காலகட்டத்திற்கு உட்பட்ட சட்ட மற்றும் வணிக நடவடிக்கை உண்மையானவற்றுடன் பொருந்தவில்லை. மேற்குறிப்பிட்ட காலத்தில் டி.ஆர்.சந்திரசேகர் சிங்கப்பூருக்கு மூன்று முறை பயணம் செய்துள்ளார். 2019ம் ஆண்டு மொத்தம் 14 நாட்கள் அங்கு தங்கியிருந்தார்.
மேற்குறிப்பிட்ட குற்றங்களுக்காக கிரிமினல் சதி, குற்றவியல் தவறான நடத்தை மற்றும் தூண்டுதல், தண்டனைக்குரிய 120 பி ஐ.பி.சி. பிரிவு 13(2), 13 (ஐ) (இ) ஊழல் தடுப்புச் சட்டம், 13 (2) 13 (ஐ)(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.”
இவ்வாறு எப்.ஐ.ஆரில் உள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை நடந்த சோதனையில் ரூ.13 லட்சம் ரொக்கம், ரூ.2 கோடி வைப்புத்தொகை, டெண்டர் ஆவணங்கள் கண்டறியப்பட்டன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்