தேனி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காலில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காலில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 






தேனி மாவட்டம் கம்பத்தில் கூடலூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் அருண்குமாரின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். அவருக்கு மேளதாளங்கள், செண்டை மேளங்கள் முழங்க, பூரண கும்ப மரியாதையுடன் அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.  இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், கே.சி.கருப்பணன் ஆகியோரும் கலந்து கொண்டனர். 


அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அனைவரும் எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை அனைவரும் சேர்ந்து நிறைவோற்றுவோம்" என தெரிவித்துள்ளார். மேலும் அனைவரும் ஒன்றிணைந்து நம் வழி தனி வழி என்ற பாணியில் செயல்படுவோம் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.


இந்த விழாவில் கலந்துக்கொண்ட முன்னால் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாள் ஒன்றை அளித்தார் அப்போது அம்மா வாழ்க! எடப்பாடியார் வாழ்க! என முழக்கமிட்ட உதயகுமார் எடப்பாடி பழனிச்சாமி காலில் விழுந்தார். இந்த சம்பவம் அரசியல் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஜெயலலிதா அதிமுகவை வழிநடத்த ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் முதல் கடைநிலை தொண்டர்கள் வரை அவரது காலில் விழுந்து வணங்கி வந்தனர். இத்தகைய செயல்கள் ஜெயலலிதா மீது கடும் விமர்சனத்தை முன்வைத்தன. அவரது மறைவிற்கு பிறகு சசிகலாவின் காலில் அனைத்து நிர்வாகிகளும் விழுந்து வணங்கியதை பல்வேறு வீடியோக்கள் அம்பலப்படுத்தின. ஆனால் சசிகலா சிறைக்கு செல்லும் முன் எடப்பாடி பழனிசாமியை கையை காட்டி விட்டு சென்றார். அன்றுமுதல் காலில் விழும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருந்த அதிமுகவில் தற்போது உதயகுமாரின் செயல் மீண்டும் உதயமாகிறதா என்ற எண்ணத்திற்கு வழிவகுத்துள்ளது. 


கடந்த சில நாட்களுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் காலியாக உள்ள அந்த தொகுதியில் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 


இதனிடையே அதிமுக கூட்டணி என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் அதிமுக  இபிஎஸ் - ஓபிஎஸ் அணியாக பிரிந்துள்ள நிலையில் இருவருமே வேட்பாளரை களமிறக்க போவதாக அறிவித்துள்ளனர். அதேபோல் இந்த கூட்டணியில் உள்ள பாஜக தனித்து போட்டியிடுவது பற்றி அடுத்த சில நாட்களில் தெரிந்து விடும். இதனால் ஈரோடு கிழக்கு தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. இந்த சூழலில் இன்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 


விரைவில் தீர்ப்பு 


அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை கடந்தாண்டு ஜூன் மாதத்தில் விஸ்வரூபம் எடுத்தது. இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பின் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டனர். இந்த சூழலில் பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இதில் தனி நீதிபதி, இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. 


இதனை எதிர்த்து  ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தை நாடினார். இதன் வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு தரப்பு வாதங்கள் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,  இனி தீர்ப்பு மட்டுமே வெளியாக வேண்டும் என்ற நிலை உள்ளது.  இந்த தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்பவே எழுந்துள்ளது.


உச்சநீதிமன்றம் தங்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கும் என ஓபிஎஸ் தரப்பு முழு நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. அதேசமயம் ஓபிஎஸ், இபிஎஸ் தவிர்த்து இந்த தீர்ப்பு லட்சக்கணக்கான தொண்டர்களின் மனதில் எழுந்துள்ள வருங்கால அதிமுகவை நிர்வகிக்கப் போவது யார் என்ற கேள்விக்கு பதிலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.