இன்று சட்டப்பேரவை தொடங்க இருக்கும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சிக்கு பயணம் மேற்கொள்கிறார்.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக 4  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாடு அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. தமிழ்நாடு அரசும் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைத்துள்ள நிலையில் விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார், 


மேலும் திமுக அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் இருவரும் கள்ளக்குறிச்சி சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் இந்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மதுவிலக்கு பிரிவு போலீசார் உள்ளிட்ட அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


இதனிடையே இன்று சட்டப்பேரவை தொடங்க இருக்கும் நிலையில் கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று கள்ளக்குறிச்சி செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார். 


இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ள செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் நிலையில், மரபுப்படி மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் உட்பட பலருக்கு இரங்கல் தீர்மானம் வாசித்து நிறைவேற்றப்படும். மறைந்தோர்க்கு அதிமுக சார்பில் இரங்கலைப் பதிவுசெய்கிறேன்.


ஆனால், இச்சூழலில், இந்த விடியா திமுக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியாலும், மெத்தனப் போக்காலும் பரிதாபமாக உயிரிழந்தோரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அவர்களின் சொல்லொண்ணா துயரில் பங்குகொள்வதே பிரதானமாக அமைகிறது. மேலும் இறப்புக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன, இறந்தவர்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்து கொள்வதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தாரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்திக்க தற்போது கள்ளக்குறிச்சி விரைகிறேன்!” எனத் தெரிவித்துள்ளார்.